(அன்வாரின் ஒற்றுமை அரசாங்கம் எத்தனை ஆண்டுகள் தாக்குப் பிடிக்கும்? விவரிக்கிறார் இரா.முத்தரசன்)
- அம்னோ தேர்தலில் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டால் ஒற்றுமை அரசாங்கம் நீடிக்குமா?
- 6 மாநில சட்டமன்றத் தேர்தல்களிலும் பெரிக்காத்தான் நேஷனல் வெற்றி வாகை சூடினால் ஒற்றுமை அரசாங்கம் சிதறிப் போகுமா?
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் பிரதமராக நவம்பர் 24-ஆம் தேதி நியமிக்கப்பட்ட அடுத்த சில நாட்களில் அவர் தன் இல்லத்துக்கருகில் மெதுவோட்டப் பயிற்சியிலும் கைகளுக்கு வலுவேற்றும் கயிறு சுற்றும் பயிற்சியிலும் ஈடுபட்ட புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவிட்டார்.
அடுத்தடுத்து அவர் நடத்திய அரசு தொடர்பான கூட்டங்களில் அவர் விடுவிடுவென வேக நடைபோட்டு வந்த காட்சிகளும், அவர் காட்டிய சுறுசுறுப்பும் 75-வயதிலும் அவர் திடகாத்திரத்துடன் திகழ்வதை எடுத்துக் காட்டின.
முன்பு ஒருமுறை பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும்போது, சிறையில் தனக்கு பாலும் சீனியும் கலக்காத தேநீர் மட்டுமே வழங்கப்பட்டதாகவும் அதை அருந்தியதால்தான் தனக்கு இன்னும் நீரிழிவு நோய் பாதிப்பில்லை என்றும் நகைச்சுவையுடன் குறிப்பிட்டார் அன்வார்.
எனவே, 75 வயதானாலும், அன்வாரின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு பார்த்தால், அவர் அடுத்த சில ஆண்டுகளுக்கு மலேசிய அரசியலில் பிரதமராகப் பிரச்சனையின்றித் தொடர்வார் என எதிர்பார்க்கலாம்.
சூட்டோடு சூட்டாக கடந்த டிசம்பர் 19-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் நிகழ்ந்த நம்பிக்கை வாக்கெடுப்பிலும் வெற்றி பெற்றிருக்கிறார் அன்வார். தீர்மானத்தின் மீதான வாக்களிப்பு – குரல் வாக்கெடுப்பு மூலம் நிர்ணயிக்கப்பட்டதால் – அவர் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை நாடாளுமன்றத்தில் கொண்டிருக்கிறாரா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.
இருப்பினும் நாடாளுமன்ற அவைத் தலைவருக்கான தேர்தலில் வெற்றி பெற்ற பிகேஆர் கட்சியின் ஜோஹாரி அப்துல் 147 வாக்குகளைப் பெற்றிருப்பதை வைத்து அன்வாரின் ஆதரவு பலத்தையும் நாம் நிர்ணயிக்க முடியும்.
மூன்றில் இரண்டு நாடாளுமன்றப் பெரும்பான்மைக்கு 148 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் – தற்போது 147 உறுப்பினர்களின் ஆதரவை அன்வார் கொண்டிருக்கிறார் என நாம் முடிவு செய்து கொள்ளலாம்.
நாடாளுமன்ற அவைத் தலைவருக்கான தேர்தலில் சரவாக் மாநிலத்தின் மூக்கா நாடாளுமன்ற உறுப்பினர் ஹானிபா ஹாஜார் தாயிப் கலந்து கொள்ளவில்லை. இவர் சரவாக்கின் ஜிபிஎஸ் கூட்டணியைச் சேர்ந்தவர். உடல் நலக் குறைவால் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.
இருப்பினும் ஜிபிஎஸ் கூட்டணியும் அன்வாரின் ஒற்றுமை அரசாங்கத்தை ஆதரிப்பதால் இவரின் ஆதரவையும் கணக்கில் சேர்த்துக் கொண்டால் 148 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை – அதாவது மூன்றில் இரண்டு பெரும்பான்மையை – அன்வார் நாடாளுமன்றத்தில் கொண்டிருக்கிறார்.
அன்வாரை ஆதரிக்கும் கட்சிகளுக்கிடையே ஏற்பட்டிருக்கும் உடன்பாட்டு ஒப்பந்தம் காரணமாக, அன்வாரின் தலைமைத்துவத்திற்கும் அரசாங்கத்திற்கும் இப்போதைக்கு ஆபத்தில்லை.
ஆனால், இந்த அரசாங்கம் அடுத்த 5 ஆண்டுகளுக்குத் தாக்குப் பிடிக்குமா? இன்னொரு ஷெராட்டன் நகர்வு போன்ற சம்பவங்களால் ஆட்சி கவிழ வாய்ப்புள்ளதா? எத்தகைய சூழ்நிலையில் அன்வாரின் ஆட்சிக்கு ஆபத்து வரலாம்? கேள்விகளும் ஐயப்பாடுகளும் அரசியல் வட்டாரங்களில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன,
அம்னோ தேர்தல் முடிவுகள் பாதிக்குமா?
அடுத்த சில மாதங்களில் நடைபெறவிருக்கும் அம்னோ கட்சியின் தேர்தல்கள் கண்டிப்பாக அன்வாரின் ஒற்றுமை அரசாங்கத்தில் சில மாற்றங்களை – சில பிரச்சனைகளை – ஏற்படுத்தும் என நம்பலாம்.
உதாரணத்திற்கு, சாஹிட் ஹாமிடியை தலைவர் தேர்தலுக்கு எதிர்த்துப் போட்டியிட முன்னாள் பிரதமர் இஸ்மாயில் சாப்ரியோ, கைரி ஜமாலுடினோ முன்வரலாம். அப்படி ஒரு போட்டி நடந்து சாஹிட் ஹாமிடியைத் எதிர்த்துப் போட்டியிட்டவர் வெற்றி பெற்று அம்னோவுக்குப் புதிய தலைவர் கிடைக்கக் கூடிய சூழலையும் நாம் மறுக்க முடியாது.
அப்படி புதிய தலைவராக வருபவர், அன்வாருக்குத் தரும் ஆதரவை அம்னோ கட்சி ரீதியாகவோ – தேசிய முன்னணி கூட்டணி ரீதியாகவோ – மீட்டுக்கொள்ள முடியும். ஒரு கட்சியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி முடிவை மீறி செயல்பட்டால்தான் – கட்சித் தாவல் தடை சட்டம் – பயன்படுத்தப்பட முடியும். மாறாக, ஒரு கட்சி ஒட்டுமொத்தமாக – அதன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒருமித்து – வேறொருவரைப் பிரதமராக ஆதரித்தால் அந்த இடத்தில் கட்சித் தாவல் தடைச் சட்டம் பயன்படுத்தப்பட முடியாது.
அப்படி அம்னோவோ, தேசிய முன்னணியோ அன்வாருக்கான ஆதரவை மீட்டுக் கொண்டாலும், தொடர்ந்து மற்ற கட்சிகளும் அன்வாருக்கு இப்போது போலவே ஆதரவு தந்து வந்தால், அன்வாரின் ஆட்சி பெரும்பான்மையோடு தடங்கலின்றி நீடிக்கும்.
ஆனால், புதிய அம்னோ தலைவர், சரவாக்கின் ஜிபிஎஸ் போன்ற கூட்டணிகளையும் இணைத்துக் கொண்டு கூண்டோடு பிரிந்து செல்ல முனைந்தால், அன்வார் அந்த சமயத்தில் நாடாளுமன்றப் பெரும்பான்மையை நிரூபிப்பதில் சிக்கல் ஏற்படக் கூடும்.
அம்னோ தலைவராக மீண்டும் சாஹிட்டே தேர்ந்தெடுக்கப்பட்டால்….
இப்போதைய சூழ்நிலையில் அம்னோ தேர்தலில் மீண்டும் சாஹிட் தலைவருக்கும் முகமட் ஹாசான் துணைத் தலைவருக்கும் போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களை எதிர்த்து யாராவது போட்டியிடுவார்களா, அல்லது அவர்களுக்கு எதிரான அணி ஒன்று உருவாகுமா என்பது இனிமேல்தான் தெரியவரும்.
அந்தப் போட்டியில் சாஹிட் ஹாமிடி மீண்டும் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், அன்வாரின் ஒற்றுமை அரசாங்கம் பிரச்சனையின்றி தொடரும் என்பதை உறுதியாக நம்பலாம்.
6 மாநிலச் சட்டமன்றத் தேர்தல்களில் பக்காத்தான் தோல்வியடைந்தால்…?
எதிர்வரும் 2023 மே மாதத்திற்குள்ளாக 6 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவிருக்கின்றன. 15-வது பொதுத் தேர்தல் முடிவுகள், கெடா, பாடாங் செராய் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் ஆகியவற்றை வைத்துப் பார்க்கும்போது, கிளந்தான், திரெங்கானு, கெடா ஆகிய மாநிலங்களை பெரிக்காத்தான் நேஷனல் கைப்பற்றும் என எதிர்பார்க்கலாம்.
பெரிதும் எதிர்பார்க்கப்படும் கேள்வி, பினாங்கு, சிலாங்கூர், நெகிரி செம்பிலான் மாநிலங்களை பக்காத்தான் கூட்டணி மீண்டும் கைப்பற்ற முடியுமா என்பதுதான்!
இந்த முறை இந்த 3 மாநிலங்களில் தேசிய முன்னணி-பக்காத்தான் ஹாரப்பான் இணைந்த கூட்டணி, தொகுதிகள் உடன்பாடு கண்டு போட்டியிடலாம். அப்படிப் போட்டியிட்டும் பெரிக்காத்தான் தப்பித் தவறி இந்த 3 மாநிலங்களையும் கைப்பற்றினால், அதன் அரசியல் விளைவுகள் மிகவும் கடுமையானதாக இருக்கும்.
நாளுக்கு நாள் மாறிவரும் மலேசிய அரசியலில் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி பினாங்கு, சிலாங்கூர் மாநிலங்களைக் கைப்பற்றுவது சாத்தியமில்லை என நாம் ஒரேயடியாகப் புறந்தள்ள முடியாது.
அப்படி நடந்தால், அன்வார் இப்ராகிம் தலைமைத்துவம் மீதான ஆதரவுக் களம் ஆட்டங் காணும் என்பதையும் மறுக்க முடியாது.
ஆனால், அந்த 6 மாநில சட்டமன்றத் தேர்தல்களில் கெடா, கிளந்தான், திரெங்கானு மாநிலங்களில் பக்காத்தான்-தேசிய முன்னணி கூட்டணி தோல்வியடைந்தாலும் பரவாயில்லை. குறைந்த பட்சம் பினாங்கு, சிலாங்கூர், நெகிரி செம்பிலான் மாநிலங்களை அன்வார் தலைமையிலான பக்காத்தான் கூட்டணி மீண்டும் கைப்பற்றியாக வேண்டும்.
இல்லாவிட்டால், அன்வாரின் கூட்டணி அரசாங்கத்தில் விரிசல்கள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது.