பாகிஸ்தான், ஏப்ரல் 25- பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கடந்த 2007ம் ஆண்டு கொல்லப்பட்ட போது, அவருக்கு போதுமான பாதுகாப்பு வழங்கத் தவறியது தொடர்பாக பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் மீது ராவல் பிண்டியில் உள்ள தீவிரவாத (தடுப்பு) நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.வழக்குப்பதிவு செய்யப்பட்ட வேளையில் பாகிஸ்தானை விட்டு வெளிநாட்டிற்கு தப்பியோடிய முஷாரப், தேர்தலில் போட்டியிடும் நோக்கத்தில் சமீபத்தில் பாகிஸ்தான் திரும்பினார்.
4 தொகுதிகளில் முஷாரப் தாக்கல் செய்த வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்நிலையில், 60 நீதிபதிகளை பதவி நீக்கம் செய்து தண்டித்த வழக்கில் சரியாக ஆஜராகாததால் அவரை கைது செய்து வீட்டுக் காவலில் அடைக்க இஸ்லாமாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டது.
வீட்டுக் காவலில் இருந்த அவரை, பெனாசிர் பூட்டோ கொலை வழக்கின் விசாரணைக்கு ஆஜர்படுத்த போலீசார் நேற்று காலை ராவல் பிண்டி தீவிரவாத (தடுப்பு) நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்றனர்.
கோர்ட்டுக்கு வெளியே முஷாரப்பின் ஆதரவாளர்களும், எதிர்ப்பாளர்களும் கற்கள் மற்றும் கம்புகளால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இந்நிலையில், ”பாகிஸ்தான் முன்னாள் அதிபரும் அந்த நாட்டு ராணுவத்தின் முன்னாள் தலைமை தளபதியுமான முஷாரப்பை அவமானப்படுத்த நினைக்கும் வக்கீல்களுக்கு சரியான பதிலடி தருவோம்” என ஓய்வு பெற்ற ராணுவ தளபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக ஓய்வு பெற்ற ராணுவ தளபதி மிர்சா அஸ்லம் பேக் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- முஷாரப்புக்கு எதிராக சிலர் வன்முறையை தூண்டிவிட்டு அரசியல் ஆதாயம் பெற முயன்று வருகின்றனர். ஒரு கட்டத்திற்கு மேல் அவரை அவமானப்படுத்துவதை மூத்த ராணுவ அதிகாரிகளான எங்களால் சகித்துக் கொள்ள முடியாது. இந்த நாட்டின் அதிபராக 7 ஆண்டு காலம் பதவி வகித்த முஷாரப்புக்கு எதிராக அவரை அவமானப்படுத்தும் வகையில் நடந்துக் கொள்ளும் துணிச்சல் இவர்களுக்கு (வக்கீல்களுக்கு) எங்கிருந்து வந்தது?
முஷாரப் வெளிநாட்டில் இருந்தபோது சமூக வலைத்தளங்களின் மூலம், பாகிஸ்தான் அவரது வருகைக்காக காத்திருப்பது போன்றும், வெளிநாட்டில் இருந்து அவர் பாகிஸ்தான் திரும்பி வந்தால் உடனடியாக அவருக்கு கிரீடம் சூட்டப்படும் என்பது போன்றும் செய்திகளை பரப்பி, சில தீய சக்திகள் சதிவலை பின்னின. அவரது வருகைக்கு பின்னர் அந்த தீய சக்திகள் எல்லாம் கூட்டணி அமைத்துக் கொண்டு, திட்டமிட்டு அவரை அவமானப்படுத்த துணிந்துள்ளன. முஷாரப்புடன் சேர்ந்து ராணுவ அமைப்பையும் தேவையில்லாத சர்ச்சைக்கு இவர்கள் உள்ளாக்க முயற்சித்து வருகின்றனர். இதேபோல், தொடர்ந்து முஷரப்பை அவமானப்படுத்தவும், ராணுவத்தை கோர்ட்டுக்கு இழுக்கவும் வக்கீல்கள் நினைத்தால் நாங்கள் சரியான பதிலடி தருவோம். அப்போது நிலைமை இன்னும் அபாயகரமாகவும், விபரீதமாகவும் மாறி விடும் என எச்சரிக்க விரும்புகிறோம்”.
முஷாரப்பின் ஆட்சி காலத்தில் பதவி உயர்வு பெற்ற அதிகாரிகளில் பலர் தற்போது ராணுவத்தின் உயர் பொறுப்புகளில் உள்ளதால் முஷரப் அவமானப்படுத்தப்படுவதை அவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். முஷரப் மீது விசுவாசம் கொண்ட சிலர் அவரை வீட்டு சிறைக்காவலில் இருந்து காப்பாற்றவும் முயற்சிக்கக்கூடும் என ஓய்வு பெற்ற ராணுவ உயரதிகாரி ஜாம்ஷெட் அயாஸ் கூறினார்.