
ஜோகூர்பாரு: இன்று வெள்ளிக்கிழமை (மே 23) நடைபெற்ற பிகேஆர் கட்சித் தேர்தலில் ரபிசி ரம்லி, துணைத் தலைவருக்கான போட்டியில் தோல்வியடைந்தாலும், அவரை ஆதரித்த இரண்டு உதவித் தலைவர் வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.
நூருல் இசாவை ஆதரித்த சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, துணையமைச்சர் டத்தோஸ்ரீ ஆர்.ரமணன் ஆகியோர் வெற்றி பெற்றனர். அதேவேளையில் ரபிசி ரம்லிக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்த நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமினுடின் ஹாருண், அமைச்சர் சாங் லீ காங் ஆகியோரும் உதவித் தலைவர்களாக வெற்றி பெற்றனர்.
போட்டியிட்ட நான்கு இந்திய வேட்பாளர்களில் ரமணன் வெற்றி வாகை சூடியிருப்பது பல இனக் கட்சியான பிகேஆரின் வரலாற்றில் முக்கியத் திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.
நான்கு உதவித் தலைவர்களுக்கான போட்டியில் இரண்டு மலாய்க்கார வேட்பாளர்கள், ஒரு சீனர், ஓர் இந்தியர் வெற்றி பெற்றிருப்பது, பிகேஆர் கட்சியின் பல இனத் தோற்றத்திற்கு மேலும் பெருமை சேர்த்துள்ளது.
டத்தோஸ்ரீ ரமணன் நான்கு உதவித் தலைவர்களில் அதிக வாக்குகளில் இரண்டாவது நிலையில் வெற்றி பெற்றிருக்கிறார் என அதிகாரபூர்வமற்ற தகவல்கள் குறிப்பிடுகின்றன.