
கோலாலம்பூர்: ஜசெக தேர்தல் பரபரப்பு முடிவுக்கு வந்து விட்ட நிலையில் அடுத்து, பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணியில் தலைமை வகிக்கும் கட்சியான பிகேஆர் தேர்தலுக்கான பிரச்சாரங்கள் தொடங்கி விட்டன.
தற்போது தொகுதி நிலையிலான தேர்தல்கள் நடைபெற்று வருகின்றன. எதிர்வரும் மே மாதம் 24-ஆம் தேதி நடைபெறவிருக்கும் தேசிய நிலையிலான கட்சித் தேர்தலில் தலைவராக அன்வார் இப்ராகிமும் துணைத் தலைவராக ரபிசி ரம்லியும் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே தேர்தல் வெப்பமும் அனைவரின் கவனமும் 4 உதவித் தலைவர் பதவிகளுக்கான போட்டியின் பக்கம் திரும்பியுள்ளது.
ஏற்கனவே, அன்வார் இப்ராகிமின் மகள் நூருல் இசா, அமைச்சர் பாமி பாட்சில், அமைச்சர் நிக் நாஸ்மி, சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருடின் ஷாரி, நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் அமினுடின் ஹாருண், அமைச்சர் சாங் லீ காங் ஆகியோர் உதவித் தலைவர் பதவிக்குப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளனர்.
உதவித் தலைவர் போட்டியில் குதிக்கவிருக்கும் இந்திய வேட்பாளர்கள் யார் என்ற கேள்வியும் பிகேஆர் வட்டாரங்களில் எழுந்து வந்தது. இந்நிலையில் கூட்டுறவு, தொழில் முனைவோர் துணை அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர்.ரமணன் உதவித் தலைவருக்குப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.
இது குறித்து பிரதமர் அன்வாரிடம் கலந்துரையாடியிருப்பதாகவும் சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான ரமணன் தெரிவித்தார். கட்சியை அனைத்து நிலைகளிலும் வலுப்படுத்தும் நோக்கிலேயே தான் போட்டியிட முன்வந்ததாக ரமணன் குறிப்பிட்டுள்ளார்.
கட்சியின் பல தரப்புகளையும் சந்தித்து கருத்துப் பரிமாற்றங்கள் செய்து கொண்ட பின்னரே உதவித் தலைவருக்குப் போட்டியிடும் முடிவை எடுத்ததாகவும் ரமணன் கூறினார்.
நிறைய வேட்பாளர்கள் போட்டியில் குதித்துள்ளதால் இறுதிக் கட்டத்தில் சிலர் போட்டியிலிருந்து விலகிக் கொள்ளக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.