கோலாலம்பூர் : “மலாய் பிரகடனம்” முன்முயற்சி தொடர்பாக துன் டாக்டர் மகாதீர் முகமட் இன்று செவ்வாய்க்கிழமை மாலை காவல் துறையினரால் விசாரிக்கப்பட்டார். இந்தத் தகவலை அவரின் வழக்கறிஞர் ரஃபீக் ரஷித் அலி தெரிவித்தார்.
இந்த முயற்சி தொடர்பான வட்டமேஜை விவாதம் சம்பந்தப்பட்ட செய்தியாளர் கூட்டத்தில் பங்கேற்றது குறித்து மகாதீர் விசாரிக்கப்பட்டதாக ரஃபீக் கூறினார்.
புக்கிட் அமானின் விசாரணை அதிகாரிகள் மகாதீரை யாயாசான் அல்புகாரி கட்டடத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் 30 நிமிடங்கள் அவரிடம் விசாரணை நடத்தினர்.
மகாதீரைத் தவிர, முன்னாள் துணை வெளியுறவு அமைச்சர் மர்சுகி யஹாயா, மலாய் பிரகடன செயலகத் தலைவர் கைருடின் அபு ஹாசன் ஆகியோரின் வாக்குமூலங்களையும் காவல் துறையினர் பெற்றனர்.
மூவரும் காவல் துறையினருடனான விசாரணையில் முழு ஒத்துழைப்பு வழங்கியதாக ரஃபீக் கூறினார்.
“நீதிமன்றத்தில் கொண்டுவரப்படும் எந்த வழக்கு விசாரணைக்கும் நான் பதிலளிப்பேன் என்று துன் கூறியிருக்கிறார்” என்று ரஃபீக் ஒரு வீடியோ கிளிப்பில் மகாதீரைக் குறிப்பிடுகிறார்.
“எழுதப்பட்டதாகவோ அல்லது பேசப்பட்டதாகவோ கூறப்படும் எந்தவொரு அறிக்கையும் தனது 22 ஆண்டுகள் – 22 மாதம் பிரதமர் பதவியில் இருந்த அனுபவத்தின் அடிப்படையில் வெளியிடப்பட்டதாக துன் காவல்துறைக்கு அளித்த வாக்குமூலத்தில் கூறியுள்ளார்” எனவும் ரஃபீக் கூறினார்.
மலாய் பிரகடனம் தொடர்பான மகாதீரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்துவது இது இரண்டாவது முறையாகும். ஏற்கனவே, ஜூன் 2 ஆம் தேதி மகாதீர் விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்தார்.