
புதுடில்லி : கடந்த புதன்கிழமை ஆகஸ்ட் 23-ஆம் தேதி மாலை நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் முயற்சியில் விண்ணில் பாய்ச்சப்பட்ட சந்திராயன் 3 விண்கலம்.
சந்திராயன் 3 திட்டம் வெற்றியடைந்து நிலவின் தென்துருவத்தில் விக்ரம் ‘லேண்டர்’ என்ற கருவி நிலவின் தரைப்பகுதியில் தரையிறங்கியது. அதிலிருந்து ரோவர் என்னும் நடமாடும் இயந்திரம் வெளிவந்து நிலவின் தரைப்பகுதியில் சுற்றி வந்து தகவல்களை இஸ்ரோ மையத்திற்கு அனுப்பிக் கொண்டிருக்கிறது. ரோவர் இயந்திரத்திற்கு பிரக்யான் எனப் பெயரிட்டிருக்கிறார்கள்.

சந்திராயன் 3 விண்கலம் தரையிறங்கிய நிலவின் பகுதி இனி சிவசக்தி என அழைக்கப்படும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருக்கிறார்.
ரோவரின் பயணம் தரையிறங்கிய நாளிலிருந்து 14 நாட்களுக்கு நீடிக்கும் என இஸ்ரோ கணித்திருக்கிறது.
இதற்கிடையில் கடந்த ஆகஸ்ட் 27-ஆம் தேதி ரோவர் தான் செல்லும் பாதையில் 4 மீட்டர் அகலம் கொண்ட பள்ளம் ஒன்றை எதிர்கொண்டது. இதைத் தொடர்ந்து அதன் பயணப் பாதையை இஸ்ரோ அறிவியலாளர்கள் மாற்றியமைத்தனர்.
தற்போது பாதுகாப்பாக ரோவரின் பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
பிரக்யான் என்ற ரோவர் நடமாடும் இயந்திரத்தில் படமெடுக்கும் கருவிகள் (கேமரா), மண்ணை அகழ்ந்தெடுக்கும் இயந்திரங்கள், அலைவீச்சையும் மின்காந்த அளவையும் கணக்கிடும் இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.