புதுடில்லி : இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் முயற்சியில் பாய்ச்சப்பட்ட சந்திராயன் 3 திட்டம் வெற்றியடைந்து நிலவின் தென்துருவத்தில் விக்ரம் ‘லேண்டர்’ என்ற நடமாடும் இயந்திரம் தரையிறங்கி சுற்றி வந்து தகவல்களை இஸ்ரோ மையத்திற்கு அனுப்பிக் கொண்டிருக்கிறது.
சந்திராயன்-3 விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கிய தருணத்தில் பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தென்னாப்பிரிக்காவில் இருந்தார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி.
அங்கிருந்து, நாட்டு மக்களிடையே தொலைக்காட்சி வழி உரை நிகழ்த்தினார் மோடி.
இந்தியா திரும்பியதும் நேராக பெங்களூருவிலுள்ள இஸ்ரோ மையத்துக்கு சென்றார் மோடி. அங்கு ஊழியர்களிடையே உரையாற்றியதோடு அவர்களுக்கு பாராட்டும் தெரிவித்தார்.
இனி, நிலவில் சந்திராயன் தரையிறங்கிய வரலாற்றுபூர்வ தினமான ஆகஸ்ட் 23, தேசிய விண்வெளி தினமாக அனுசரிக்கப்படும் என்றும் மோடி அறிவித்தார்.
சந்திராயன் 3 திட்டம்
கடந்த 2008-ம் ஆண்டு ‘சந்திரயான்-1’ விண்கலத்தை நிலவுக்கு அனுப்பி இந்தியா சாதனை படைத்தது. நிலவில் தண்ணீர் இருப்பதையும் அது உறுதி செய்தது. அதன்பிறகு, 2019-ம் ஆண்டு நிலவின் தென்துருவத்துக்கு ‘சந்திரயான்-2’ விண்கலம் அனுப்பப்பட்டது. ஆனால் அதன் ‘லேண்டர்’ கருவி நிலவின் தரையில் மோதி உடைந்தது. ஆனால் ‘சந்திரயான்-2’-ல் அனுப்பப்பட்ட ‘ஆர்பிட்டர்’ என்னும் கருவி தற்போதும் நிலவைச் சுற்றி வந்து தகவல்களை தந்துகொண்டிருக்கிறது.
கடந்த ஜூலை 14-ந்தேதி ‘சந்திரயான்-3’ விண்கலத்தை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய இந்தியா அனுப்பியது.
ரூ.615 கோடி செலவில் 40 நாள் பயண திட்டத்துடன் அனுப்பப்பட்டது ‘சந்திரயான்-3’ விண்கலம். நிலவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இந்த விண்கலம் இஸ்ரோவுக்கு அனுப்பி வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு உந்து கலனில் இருந்து ‘விக்ரம் லேண்டர்’ கருவி பிரிக்கப்பட்டது. இந்த ‘லேண்டர்’, கடந்த புதன்கிழமை ஆகஸ்ட் 23-ஆம் தேதி மாலை நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது.
இந்த வெற்றியைத் தொடர்ந்து விண்வெளி ஆராய்ச்சியில் ரஷியா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா 4-வது இடத்தை பெற்றிருக்கிறது.
நிலவின் தென்துருவத்தை தொட்ட முதல் நாடு என்ற சாதனையையும் இந்தியா படைத்திருக்கிறது.