Home இந்தியா சந்திராயன் 3 : நிலவு நோக்கி வெற்றிகரமான பயணத்தைத் தொடர்கிறது

சந்திராயன் 3 : நிலவு நோக்கி வெற்றிகரமான பயணத்தைத் தொடர்கிறது

406
0
SHARE
Ad

புதுடில்லி : விண்வெளி ஆராய்ச்சித் துறையில் பெரும் வளர்ச்சி கண்டு வரும் இந்தியாவின் அடுத்த கட்ட முயற்சியான சந்திராயன் 3 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டு நிலவை நோக்கித் தன் பயணத்தைத் தொடர்ந்து வருகிறது. அந்த வெற்றிப் பயணத்தின் சில முக்கிய அம்சங்கள்:

  1. ஆந்திராவின் ஶ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து சந்திரயான்-3 விண்கலம், எல்விஎம் 3 ராக்கெட் மூலமாக கடந்த வெள்ளிக்கிழமை ஜூலை 14-ஆம் தேதி பிற்பகல் 2.35 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் பாய்ச்சப்பட்டது.
  2. புவி சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்ட சந்திராயன்-3 நிலவுக்கான பயணத்தை வெற்றிகரமாக தொடங்கி இருக்கிறது.
  3. இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவின் தலைவராக தற்போது சோம்நாத் செயல்படுகிறார்.
  4. சந்திரயான் 3 திட்டத்தின் சுமார் 25,000 உதிரிப்பாகங்கள் ஒடிசாவில் தயாரிக்கப்பட்டவை.
  5. சந்திரயான் 3, சுமார் 40 நாட்கள் பயணித்து 3.84 லட்சம் கி.மீ தொலைவில் உள்ள நிலவை சென்றடைய உள்ளது
  6. பிரதமர் மோடி, இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.
  7. சந்திராயன்-3 திட்ட இயக்குநராக வீரமுத்துவேல் என்னும் தமிழர் செயல்படுகிறார்.
  8. சந்திரயான்-3 ஆகஸ்ட் 23-ல் நிலவில் கால் பதிக்கும்.
  9. நிலவின் தென்பகுதியில் சந்திரயான்-3 லேண்டர் தரையிறங்கும்.
  10. 7 ஆய்வுக் கருவிகள், 3900 கிலோ எடையுடன் விண்ணில் சந்திரயான்-3 விண்கலம் பயணிக்கிறது. நிலவின் தென் துருவத்தை இது ஆய்வு செய்யும்.
  11. சந்திராயனின் உந்துவிசை கலனின் எடை 2,145 கிலோ. லேண்டர், ரோவர் ஆகிய கலன்களை நிலவின் சுற்றுப்பாதைக்கு கொண்டு செல்வது இதன் முக்கியப் பணி.
  12. இதில் இருந்து லேண்டர் பிரிக்கப்பட்ட பின்னர் 3 முதல் 6 மாதங்கள் நிலவை சுற்றி வந்து ஆய்வு செய்யும்.
  13. நிலவில் தரையிறங்கும் கலனான லேண்டர் 1,750 கிலோ எடை கொண்டது. இதன் ஆயுட்காலம் 14 நாட்கள். இதில் 3 விதமான ஆய்வு கருவிகள் உள்ளன. நிலவின் மேற்பரப்பு வெப்பம், நிலஅதிர்வுகள், அயனிக் கூறுகள் உள்ளதா என்பதை அந்த கருவிகள் பரிசோதிக்கும். நாசாவின் எல்ஆர்ஏ(லேசர் ரெட்ரோரிப்ளக்டர் அரே) எனும் மற்றொரு கருவி பிரதிபலிப்பான் தொழில்நுட்பத்தை கொண்டது. அது லேசர் கற்றைகளை பிரதிபலித்து, பூமிக்கும், நிலவுக்குமான தொலைவுகளை ஆய்வு செய்யும்.
  14. நிலவில் லேண்டர் தரையிறங்கிய சில மணி நேரத்துக்கு பிறகு, அதில் இருந்து ரோவர் வாகனம் வெளியே வரும். தனது 6 சக்கரங்களின் உதவியுடன் நிலவில் குறிப்பிட்ட தூரம் வரை ஊர்ந்து சென்று ஆய்வில் ஈடுபடும்.
  15. இஸ்ரோவில் நீண்ட காலமாக தமிழர்கள் முக்கியப் பங்கு வகித்து வந்துள்ளனர். இதன் தலைவராகப் பணியாற்றி அப்துல் கலாம் இந்திய அதிபராக உயர்ந்தார்.
  16. மயில்சாமி அண்ணாதுரை சந்திரயான் 1 ஐ இயக்கினார்.
  17. எம். வனிதா சந்திரயான் 2 ஐ மேற்பார்வை செய்தார். இப்போது, விழுப்புரத்தைச் சேர்ந்த பி வீரமுத்துவேல், சந்திராயன் 3-வது திட்டத்திற்கு தலைமை தாங்குகிறார்.
  18. சந்திரயான்-3 திட்ட இயக்குனராக உள்ள வீரமுத்துவேல் (46) விழுப்புரத்தை சேர்ந்தவர் ஆவார். இவர் விழுப்புரத்தில் உள்ள ரயில்வே பள்ளியில் படித்து முடித்து, தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் டிப்ளமோ முடித்துவிட்டு தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பணிபுரிந்தவர் ஆவார். பின்னர் இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். 1989ல் இஸ்ரோவில் விஞ்ஞானியாக சேர்ந்தார். சந்திரயான்-2 திட்ட இயக்குநராக இருந்த வனிதாவுக்குப் பிறகு வீரமுத்துவேல் பதவியேற்றார். அப்போதைய இஸ்ரோ தலைவராக இருந்த கே சிவன் தமிழகத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
  19. கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் கே சிவன், குடும்பத்தின் முதல் பட்டதாரி ஆவார். 1980 ஆம் ஆண்டு எம்ஐடியில் தனது வானூர்திப் பொறியியலை முடித்தார். பின்னர், 1982 ஆம் ஆண்டு பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் விண்வெளிப் பொறியியலில் முதுகலைப் பட்டம் பெற்றார்.