கோலாலம்பூர் : நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் பிரபலமான வசனம் “மற்றவர்களுக்கு வந்தால் ரத்தம் – எனக்கு வந்தால் தக்காளிச் சட்னியா…” என்பது!
அதேபோல, முன்னாள் பிரதமர் துன் மகாதீரின் கடந்த கால வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால் அவர் சிறைக்கு அனுப்பியவர்களின் பட்டியல் நீளமானது. 1987-இல் ஒரே சமயத்தில் 100-க்கும் மேற்பட்டவர்களை உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் அடிப்படையில் கைது செய்து சிறையில் அடைத்தவர் அவர்.
அவரின் ஆட்சிக் காலத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரை எவ்வாறு கொடூரமாக வழக்கு தொடுத்து சிறையில் அடைத்தார் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். எத்தனையோ பேரை காவல் துறை விசாரணைகளுக்கு உட்படுத்தியிருக்கிறார். இன்றைய துணைப் பிரதமர் சாஹிட் ஹாமிடியும் ஒருமுறை மகாதீரால் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறைப்படுத்தப்பட்டவர்தான்.
ஆனால், இன்று செவ்வாய்க்கிழமை (ஜனவரி 23) பிற்பகலில், தான் கூறிய சில இன விரோத கருத்துகளுக்காக காவல் துறை விசாரணைக்கு அழைக்கப்பட்ட மகாதீர் அதுகுறித்து பத்திரிகையாளர்களிடம் புலம்பியிருக்கிறார். அவரின் பெர்டானா லீடர்ஷிப் அறவாரிய அலுவலகத்தில் அவரை காவல் துறையினர் விசாரித்து இன்று வாக்குமூலம் எடுத்தனர்.
தன் மனதில் பட்டதைப் பேசியதற்காக தான் ஒரு குற்றவாளி போல் நடத்தப்படுவதாக புலம்பியிருக்கிறார் மகாதீர்.
“கடந்த சில வருடங்களில் 10 தடவைகளுக்கும் மேலாக காவல்துறையினர் நான் பேசிய கருத்துகளுக்காக என்னிடம் வாக்குமூலம் பெற்றிருக்கின்றனர். நீங்கள் துன் பட்டம் பெற்றால் உங்கள் மீது விசாரணை நடத்தப்படும்” என்றும் மகாதீர் கூறியிருக்கிறார்.
ஆனால், அவரே இப்போது பிரதமராக இருந்தால், வேறொருவர் இப்படிப் பேசியிருந்தால் சும்மா விட்டிருப்பாரா?
“நமது நாட்டில் பேச்சு சுதந்திரம் இருப்பதாகக் கருதுகிறேன். என்னைவிட மோசமான இனவிரோதக் கருத்துகளை மற்றவர்கள் பேசியிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் மீது நடவடிக்கையில்லை. ஆனால் நான் ஏதாவது கூறினால் மட்டும் அது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகி விடுகிறது” எனத் தெரிவித்திருக்கிறார் மகாதீர்.
இந்தியாவின் தந்தி தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டியில் அவர் கூறியிருக்கும் இனவிரோத கருத்துகள் தொடர்பில் இதுவரை 18 புகார்கள் காவல்துறையில் செய்யப்பட்டதாக தன்னிடம் தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
தன்னிடம் 19 கேள்விகள் கேட்கப்பட்டதாகவும் அவற்றில் சிலவற்றுக்குத் தான் பதிலளித்ததாகவும் மற்ற கேள்விகளுக்கு நீதிமன்றத்தில் தான் பதிலளிக்க விரும்புவதாகவும் மகாதீர் இன்று பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.