கோலாலம்பூர் : கடந்த ஜனவரி 20-ஆம் தேதி காலமான டான்ஸ்ரீ தேவகி கிருஷ்ணனின் மறைவுக்காக மாமன்னர் தம்பதியர் தங்களின் ஆழ்ந்த இரங்கலைப் பதிவு செய்துள்ளனர்.
100-வது வயதில் காலமான டான்ஸ்ரீ தேவகி கிருஷ்ணனின் குடும்பத்திற்கும் மாமன்னர் தம்பதியர் தங்களின் அனுதாபங்களைத் தெரிவித்தனர். இந்த சோகமான சூழ்நிலையை அமரர் தேவகி கிருஷ்ணனின் குடும்பத்தினர் பொறுமையுடன் எதிர்கொள்வர் என்ற நம்பிக்கையையும் மாமன்னர் தம்பதியர் தெரிவித்தனர்.
தேவகி கிருஷ்ணனின் மலேசிய சமூகத்திற்காக ஆற்றிய சேவைகளையும் தியாகத்தையும் பாராட்டிய மாமன்னர் தம்பதியர் அவரின் மறைவு நாட்டிற்கு ஒரு பெரிய இழப்பு என்றும் வர்ணித்தனர்.
மலேசிய அரசியலில் செல்வாக்கு மிக்க பெண்மணியாகத் திகழ்ந்த தேவகி கிருஷ்ணன் அவரது வாழ்க்கையை சமூகத்திற்கு சேவை செய்வதற்கே அர்ப்பணித்தார் எனவும் மாமன்னர் தம்பதியர் புகழாரம் சூட்டினர்.
1923 ஆம் ஆண்டு மார்ச் 11 ஆம் தேதி நெகிரி செம்பிலானில் உள்ள போர்ட் டிக்சனில் பிறந்தவர் ஆசிரியையாகப் பணிபுரிந்தார். 1952 இல் கோலாலம்பூரில் உள்ள முனிசிபல் கவுன்சில் தேர்தலில் போட்டியிட்டு வென்றதன் வழி முதன் முதலாக ஒரு பொதுத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட மலேசியப் பெண்மணியாகத் சாதனை படைத்தார். அம்னோவின் தோற்றுநரான டத்தோ ஒன் ஜாபரின் அழைப்பின் பேரில் 1951 இல் மலாயா சுதந்திரக் கட்சியில் (IMP) சேர்ந்தார் தேவகி கிருஷ்ணன். 1952 கோலாலம்பூர் முனிசிபல் தேர்தலுக்குப் பிறகு, மஇகாவில் தொடர்ந்து அரசியல் ஈடுபாடு காட்டினார். மஇகாவில் மகளிர் பிரிவை நிறுவுவதில் தீவிரமாக ஈடுபட்டார். 1975 இல் தேசிய மஇகா மகளிர் பிரிவின் முதல் தேசியச் செயலாளராக பணியாற்றினார் எனவும் மாமன்னர் தன் அனுதாபக் குறிப்பில் தெரிவித்தார்..
பிரதமரின் அனுதாபம்
இதற்கிடையில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமும் தேவகி கிருஷ்ணனின் மறைவுக்கு தன் அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்டார். அவரின் மறைவு வருத்தத்தை அளிக்கிறது எனக் குறிப்பிட்ட பிரதமர், தேசியத் தலைமையிலும், அரசியலிலும் பெண்களின் கண்ணியத்தை உயர்த்தும் போராட்டங்களிலும் சமூகத்திற்காக பாடுபட்டவர் தேவகி கிருஷ்ணன் என்றும் புகழாரம் சூட்டினார்.
அவரின் சேவைகளும் தியாகங்களும் என்றென்றும் நினைவுகூரப்படும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.