Home நாடு டான்ஸ்ரீ தேவகி கிருஷ்ணன் 100-வது வயதில் காலமானார்

டான்ஸ்ரீ தேவகி கிருஷ்ணன் 100-வது வயதில் காலமானார்

487
0
SHARE
Ad
டான்ஸ்ரீ தேவகி கிருஷ்ணன்

கோலாலம்பூர் : அரசியலிலும் பொதுவாழ்விலும் நீண்ட காலம் தீவிர ஈடுபாடு காட்டிய டான்ஸ்ரீ தேவகி கிருஷ்ணன், நேற்று சனிக்கிழமை (ஜனவரி 20) தன் 100-வது வயதில் காலமானார்.

நேற்றிரவு அவர் இரவு 8.00 மணியளவில் தன் இல்லத்தில் முதுமை காரணமாக மரணமடைந்தார் என அவரின் பேரனும் தொழில் முனைவோர் கூட்டுறவுத் துறை துணையமைச்சருமான டத்தோ ஆர்.ரமணன் உறுதிப்படுத்தினார்.

சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான ரமணன், மறைந்த தேவகி கிருஷ்ணனுக்கான இறுதிச் சடங்குகளுக்கான விவரங்கள் முடிவானதும் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

1952-ஆம் ஆண்டில் நாட்டில் நடைபெற்ற முதல் தேர்தல் கோலாலம்பூர் முனிசிபல் என்னும் கோலாலம்பூருக்கான ஊராட்சி தேர்தலாகும். அந்தத் தேர்தலில் தேவகி கிருஷ்ணன் போட்டியிட்டு பங்சார் வட்டாரத்திற்கான, கோலாலம்பூர் நகராண்மைக் கழக உறுப்பினராக வெற்றி பெற்றார். இதன் மூலம் தேர்தல் மூலம் நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மலேசியப் பெண்மணி என்ற பெருமையை அவர் பெற்றார்.

மஇகாவில் தீவிர ஈடுபாடு காட்டிய அவர் மஇகா கூட்டரசுப் பிரதேச மகளிர் தலைவியாகவும், தேசிய மகளிர் பகுதியிலும் சேவையாற்றியிருக்கிறார்.

போர்ட்டிக்சனில் பிறந்தவரான தேவகி கிருஷ்ணன் சுதந்திரத்திற்குப் பின் நாட்டில் நடைபெற்ற முதலாவது 1959 பொதுத் தேர்தலில்  அலையன்ஸ் கூட்டணி (இன்றைய தேசிய முன்னணி) சார்பில் செந்துல் சட்டமன்றத்திற்குப் போட்டியிட்டார். எனினும் தோல்வி கண்டார்.

கோலாலம்பூர் மாநகரில் முதன் முதலாக கார் ஓட்டிய மலேசியப் பெண்மணி என்ற சாதனையையும் அவர் கொண்டுள்ளார்.

நீண்ட காலமாக பல்வேறு சமூகப் பணிகளில் அவர் ஈடுபட்டு வந்தார்.

அவரின் கணவர் கிருஷ்ணன் 1998-இல் காலமானார்.