பெர்லின் : இன்று ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 10) இரவு அதிகாரபூர்வ வருகை மேற்கொண்டு ஜெர்மனி வந்தடையும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் நிச்சயம் தன் பழைய நினைவுகளை மீண்டும் ஒரு முறை அசை போடுவார்.
காரணம், முதலாவது ஓரின உறவு குற்றச்சாட்டிலிருந்து 2004-இல் விடுதலையான பின்னர் அன்வார் தனக்கிருந்த கடுமையான முதுகுவலிக்கான மருத்துவ சிகிச்சைக்காக உடனடியாக ஜெர்மனியின் மூனிச் நகருக்குப் புறப்பட்டார்.
அப்போது பிரதமராக இருந்தவர் துன் அப்துல்லா அகமட் படாவி. அவரின் மருமகனும் பின்னாளில் அம்னோ அமைச்சராக இருந்தவருமான கைரி ஜமாலுடின்தான் அன்வாரின் இல்லம் சென்று அன்வாருக்கான பயணக் கடப்பிதழ் ஆவணங்களை நேரடியாக அவரிடம் ஒப்படைத்தார்.
மனைவியுடன் ஜெர்மனி சென்று, முதுகுத் தண்டு பிரச்சனைக்கு சிகிச்சை பெற்று நாடு திரும்பினார் அன்வார்.
இப்போது 20 ஆண்டுகள் கழித்து அதே ஜெர்மனிக்கு – அதுவும் பிரதமராக – அதிகாரபூர்வ வருகை மேற்கொள்வது அன்வாருக்கு வித்தியாசமான அனுபவமாக இருக்கும்.
இன்று தொடங்கி 6 நாட்களுக்கு ஜெர்மனிக்கு அதிகாரபூர்வ வருகை மேற்கொள்ளும் பிரதமர் அந்நாட்டு அரசியல் தலைவர்களையும், தொழிலதிபர்களையும் சந்திப்பார். ஜெர்மனி, ஐரோப்பிய நாடுகளில் மலேசியாவுடனான மிகப் பெரிய வணிகப் பங்காளித்துவ நாடாக விளங்குகிறது.