
புதுடில்லி : சில குடும்பங்களில் அபூர்வமான, மகிழ்ச்சிகரமான திருப்பங்கள் நடக்கும். பிரிட்டனின் பிரதமர் ரிஷி சுனாக்கின் குடும்பத்திலும் அவ்வாறே நடந்திருக்கிறது. அவரின் மனைவி அக்ஷதா நாராயணமூர்த்தியின் தாயார் சுதா மூர்த்தி. சுதாவை இந்திய நாடாளுமன்ற மேலவையின் (ராஜ்யசபா) உறுப்பினராக பிரதமர் நரேந்திர மோடி நியமித்திருக்கிறார்.
மார்ச் 8-ஆம் தேதி கொண்டாடப்பட்ட மகளிர் தினத்தை முன்னிட்டு மோடி இந்த நியமனத்தைச் செய்திருக்கிறார்.
தகவல் தொழில் நுட்பத் துறை வல்லுநரான நாராயணமூர்த்தி இன்போசிஸ் என்ற நிறுவனத்தை உருவாக்கி உலகத் தரம் வாய்ந்த வணிக நிறுவனமாக உருமாற்றினார். சுதாவும் கன்னட மொழியிலும், ஆங்கிலத்திலும் நாவல்கள், தொழில் நுட்ப நூல்கள், பயணக் கட்டுரைகள் என எழுதிக் குவித்த பிரபல எழுத்தாளர்.
பல அறப்பணிகளை செய்திருக்கும் சுதா, உலக அளவில் இந்திய பாரம்பரிய நூல்நிலையத்தை அமெரிக்காவின் ஹார்வார்ட் பல்கலைக் கழகத்தில் உருவாக்கியவர்.
1950-இல் கர்நாடகாவின் ஷிக்காவுன் வட்டாரத்தில் பிறந்த சுதா, கணினித் துறை பொறியியலாளர் ஆவார். டாடா என்ஜினியரிங் நிறுவனத்தால் பணிக்கு அமர்த்தப்பட்ட முதல் பெண் பொறியியலாளர் சுதா ஆவார்.
பத்ம பூஷன் விருதும் பெற்றவர் சுதா. இன்போசிஸ் நிறுவன அறவாரியத்தின் தலைவருமாவார்.