புதுடில்லி : தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைத்து மீண்டும் நரேந்திர மோடி நாளை ஜூன் 8-ஆம் தேதி பிரதமராகப் பதவியேற்கிறார் என அறிவிக்கப்பட்டது.
ஆனால், ஆகக் கடைசியான தகவல்களின்படி மோடியின் பதவியேற்பு நிகழ்ச்சி ஜூன் 9-ஆம் தேதி மாலை 6.00 மணிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தாமதத்திற்கான காரணம் என்பது குறித்து பல ஆரூடங்கள் நிலவுகின்றன.
தவிர்க்க முடியாத காரணங்களுக்காக பதவியேற்பு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது என்று கூறப்பட்டாலும் சந்திரபாபு நாயுடுவும் நிதிஷ்குமாரும் முன்வைக்கும் அமைச்சரவைக் கோரிக்கைகள் காரணமாகவே இந்த ஒத்தி வைப்பு என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பீகார் மாநிலத்தில் நிதிஷ்குமாரின் ஜனதா தளம் (யுனைடெட்) 12 தொகுதிகளைக் கைப்பற்றியது. ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுகு தேசம் கட்சி 17 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
இந்த இரண்டு கட்சிகளின் சார்பாகவும் முக்கிய அமைச்சரவைப் பொறுப்புகள் வேண்டும் என வலியுறுத்தப்படும் வேளையில் பாஜகவும் சில முக்கிய அமைச்சுகளைத் தங்களின் வசமே வைத்துக் கொள்ள முனைந்துள்ளது.
பிரதமரின் பதவியேற்பு விழாவில் பல அயல்நாட்டு தலைவர்களும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.