கீவ் (உக்ரேன்) – இரஷியாவுக்கு எதிரான போரில் உக்ரேன் இராணுவம் முன்னேறி வருவதாகத் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், உக்ரேனின் முக்கிய உட்கட்டமைப்புகள், எரிசக்தி மையங்கள் மீது டுரோன் என்னும் சிறு வானூர்திகளைக் கொண்டும், ஏவுகணைகள் கொண்டும் இரஷியா தாக்குதல் நடத்தியுள்ளது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 25) இரவிலும் இந்தத் தாக்குதல்கள் தொடர்ந்ததாகவும், இதன் காரணமாக 4 பேர் கொல்லப்பட்டதாகவும் நாடு தழுவிய அளவில் பல நகர்களில் மின்சாரத் தடை ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுமார் 15 வட்டாரங்களை இரஷியா குறிவைத்துத் தாக்கியது. இதன் காரணமாக பல இடங்களில் மக்கள் மின்சாரம் இன்றி அவதிப்பட்டனர்.
இரஷியாவின் எல்லைப் பகுதியான குர்ஸ்க் பகுதியில் உக்ரேன் இராணுவம் முன்னேறியதாகத் தகவல்கள் வந்ததைத் தொடர்ந்து பதிலடிக்குத் தயாராக இருக்கும்படி உக்ரேனை அமெரிக்கத் தூதரகம் எச்சரித்தது.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் இரஷியாவின் நிலப்பகுதி மற்றொரு நாட்டால் கைப்பற்றப்பட்டது இதுவே முதன் முறையாகும்.