*ஹலால் சான்றிதழ் விவகாரத்தினால் இந்திய உணவக உரிமையாளர்கள் எதிர்நோக்கக்கூடிய சிரமங்கள்!
*சோஸ்மா சட்டத்தால் இந்தியக் குடும்பங்கள் படும் துயரங்கள்!
*டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் விளக்கமாக எடுத்துரைத்ததாக மஇகா பேராளர்கள் பாராட்டு!
கோலாலம்பூர்: ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 15) நடைபெற்ற மஇகாவின் 78-வது தேசியப் பொதுப் பேரவையை அதிகாரபூர்வமாகத் திறந்து வைக்க வைத்திருந்த துணைப் பிரதமர் முன்னிலையில் மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் ஆற்றிய உரை பரவலாக பேராளர்களின் கவனத்தை ஈர்த்தது.
குறிப்பாக, ஹலால் சான்றிதழ் விவகாரத்தினால் இந்திய உணவகங்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை எடுத்துரைத்த விக்னேஸ்வரன் தொடர்ந்து சோஸ்மா சட்ட அமுலாக்கத்தினால், பல இந்தியக் கைதிகள் விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக துணைப் பிரதமரிடம் தெரிவித்தார். விசாரணையின்றி நீண்ட காலம் தடுப்புக் காவலில் இருக்கும் கைதிகளின் குடும்பத்தினர் தங்களை வந்து பார்த்து கண்ணீருடன் முறையீடு செய்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதன் காரணமாக, பல இந்தியக் கைதிகளுக்கு மஇகா சட்ட உதவிகள் வழக்கறிஞர் பிரதிநிதித்துவம் வழங்கியதாகவும் விக்னேஸ்வரன் தனதுரையில் தெரிவித்தார்.
விக்னேஸ்வரனின் விளக்கங்களைத் தொடர்ந்து சாஹிட் ஹாமிடியும் தனதுரையில் ஹலால் குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும், முஸ்லீம் அல்லாதவர்கள் மீது ஹலால் சான்றிதழைத் திணிப்பது முறையல்ல என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து சோஸ்மா சட்டம் மீதான குறைகளைக் கவனிப்பதாகவும் அமைச்சரவையின் கவனத்திற்குக் கொண்டு வருவதாகவும் சாஹிட் மஇகா பொதுப் பேரவையில் தெரிவித்தார்.