Home உலகம் இலங்கை அதிபர்: திசாநாயக்க – சஜித் பிரேமதாசா – இருவருக்கான விருப்ப வாக்குகள் எண்ணப்படுகின்றன!

இலங்கை அதிபர்: திசாநாயக்க – சஜித் பிரேமதாசா – இருவருக்கான விருப்ப வாக்குகள் எண்ணப்படுகின்றன!

416
0
SHARE
Ad

* அனுரா குமார திசாநாயக்க – 42.31%
* சஜித் பிரேமதாச – 32.76 %
* ரணில் விக்கிரமசிங்கே –  17.27%
* நமல் ராஜபக்சே –  2.57 %

கொழும்பு : தேசிய மக்கள் சக்தி (NPP) வேட்பாளர் அனுர குமார திசாநாயக்க அடுத்த இலங்கை அதிபராக வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக வேட்பாளர்களுக்கான விருப்ப வாக்குகளை எண்ணும் பணி தொடங்கப்பட்டிருக்கிறது.

நேற்று சனிக்கிழமை (செப்டம்பர் 21) நடைபெற்ற இலங்கை அதிபருக்கான தேர்தலில் முன்னிலை வகித்தாலும், அவரால் 42.31% வாக்குகளை மட்டுமே பெற முடிந்திருக்கிறது.

அவருக்கு அடுத்த நிலையில் சஜித் பிரேமதாசா 32.76% வாக்குகள் பெற்றார்.

#TamilSchoolmychoice

எந்த வேட்பாளரும் 50 விழுக்காட்டுக்கும் கூடுதலான வாக்குகளைப் பெற முடியாததால், வேட்பாளர்களுக்கு அளிக்கப்பட்ட இரண்டாவது விருப்ப வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியிருக்கிறது.

இலங்கை அதிபர் தேர்தல் நடைமுறைப்படி ஒரு வாக்காளர் அதிபர் தேர்தலில் வாக்களிக்கும் போது இரண்டாவது விருப்ப வாக்கையும் வேட்பாளர் ஒருவருக்கு அளிக்க வேண்டும்.

இந்நிலையில், முதல் இரண்டு இடங்களை அதிக வாக்குகளில் பெற்ற வேட்பாளர்கள் திசாநாயக்காவுக்கும், சஜித் பிரேமதாசாவுக்குமான இரண்டாவது விருப்ப வாக்குகள் தற்போது எண்ணப்படுகின்றன. ரணில் விக்கிரமசிங்கே அடுத்த கட்டப் போட்டியில் இடம் பெறவில்லை.

பெரும்பாலான தமிழ் வாக்காளர்கள் சஜித் பிரேமதாசாவுக்கு வாக்களித்திருக்கிறார்கள் எனக் கூறப்படுகிறது. இதன் காரணமாக இறுதி நேரத்தில் வாக்கு எண்ணிக்கையில் சஜித் பிரேமதாசா முன்னிலை பெற்று வெற்றி பெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை எனக் கூறப்படுகிறது.

அவ்வாறு அவர் வெற்றி பெற்றால், தமிழர் ஆதரவினால்தான் வெற்றி பெற்றார் என்ற நிலைமை ஏற்படும்.

இலங்கையில் அதிபர் தேர்தல் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து இரண்டாவது விருப்ப வாக்குகள் எண்ணப்படுவது இதுவே முதன் முறையாகும்.

2022-இல் நடந்த மக்கள் எழுச்சிக்குப் பிறகு நடைபெற்ற முதல் தேர்தல் இதுவாகும். அந்த எழுச்சியினால் அப்போதைய அதிபர் கோத்தாபாய ராஜபக்சேயை பதவி விலகி நாட்டை விட்டு வெளியேற நேர்ந்தது.

மற்ற முக்கிய வேட்பாளர்களில் ஒருவரான முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சேயின் மகன் நாமல் ராஜபக்சே மோசமான முறையில் தோல்வியைத் தழுவியுள்ளார். அவருக்கு 2.57% வாக்குகள் மட்டுமே கிடைத்தன.

தமிழ் மக்களின் பொது வேட்பாளராகப் போட்டியிட்ட அரியநேந்திரன் 1.70% வாக்குகள் பெற்றார்.

இலங்கையில் கடைசியாக நேரடி அதிபர் தேர்தல் 2019-இல் நடைபெற்றது. அதில் எஸ்எல்பிபி (SLPP) வேட்பாளர் கோத்தாபாய ராஜபக்சே தனது முக்கிய எதிராளி சஜித் பிரேமதாசாவை தோற்கடித்து பெரும் வெற்றி பெற்றார்.

2022 இலங்கை போராட்டங்களின் மத்தியில் கோத்தாபாய 2022 ஜூலை 14-ஆம் தேதி தனது பதவியிலிருந்து விலகினார்.

இதைத் தொடர்ந்து பிரதமராக நியமிக்கப்பட்டிருந்த ரணில் விக்கிரமசிங்க அதிக வாக்குகளைப் பெற்று 2022 ஜூலை 21 அன்று இலங்கையின் 9-வது அதிபராகப் இடைக்காலத்திற்குப் பதவியேற்றார். 2019-ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட கோத்தாபாயவின் 5 ஆண்டுக் காலத் தவணையின் எஞ்சிய காலகட்டத்திற்கு மட்டுமே ரணில் பதவி வகிக்க முடியும் என இலங்கை அரசியலமைப்பு சட்டம் கூறுகிறது.

இலங்கையில் அதிபருக்கே அதிகமான அதிகாரங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. புதிய அதிபர் இலங்கை அரசியலில் பல மாற்றங்களைக் கொண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கம்யூனிச சித்தாந்தங்களின் அடிப்படையில் அவரின் கட்சி செயல்படுகிறது.