சென்னை : நேற்று ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 6) மெரினா கடற்கரையில் நடைபெற்ற இந்திய விமானப் படையின் சாகசக் காட்சிகளைக் காண வரலாறு காணாத கூட்டம் திரண்டது என அரசாங்கத் தரப்பினர் பெருமைப் பட்டுக் கொண்ட நிலையில், அந்த சாகசக் காட்சிக்குப் பின் கடும் வெப்பம், கூட்ட நெருக்கடி தொடர்பான பிரச்சினைகளால் குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்தனர். மேலும் 100 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
விமானக் காட்சிக்குப் பின் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
இதுகுறித்து ஸ்டாலின் இன்று திங்கட்கிழமை கூறுகையில், நேற்று சென்னை மெரீனா கடற்கரையில் நடைபெற்ற விமானப்படையின் விமானக் காட்சிக்கு, விமானப்படை கோரியதை விட அதிகமான வசதிகளை மாநில அதிகாரிகள் வழங்கினர் என்றார்.
எதிர்கால நிகழ்வுகளில் மேலும் கவனம், சிறந்த கூட்ட மேலாண்மை அளிக்கப்படும் எனவும் ஸ்டாலின் உறுதியளித்தார்.
இந்த விவகாரம் குறித்து பேசிய ஸ்டாலின், மக்கள் திரும்பிச் செல்லும்போது தங்கள் வாகனங்களை அடைவதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டதாகவும், எதிர்காலத்தில் இந்த அம்சங்களில் மேலும் கவனம் செலுத்தப்படும் என்றும், அதற்கேற்ப தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் கூறினார்.