Home Photo News முருகு நூற்றாண்டு விழா: சரவணன் தலைமை – முருகு நினைவுகளுடன் சிறப்புரைகள்!

முருகு நூற்றாண்டு விழா: சரவணன் தலைமை – முருகு நினைவுகளுடன் சிறப்புரைகள்!

115
0
SHARE
Ad

அமரர் முருகு சுப்பிரமணியன் அவர்கள் மலேசிய இந்திய சமுதாயத்திற்காகவும், தமிழ் நாடு, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் தமிழ் இலக்கிய உலகுக்கும் தமிழ் மொழி, தமிழ் இலக்கியம், ஊடகத் துறை, சமூக நலன்கள், அரசு சார்பற்ற இயக்கங்கள் என பன்முகத்தன்மையோடு ஆற்றிய சேவைகளையும் பங்களிப்பையும் நினைவுகூரும் வகையில் ‘முருகு நூற்றாண்டு விழா’ விமரிசையாகக் கொண்டாடப்படவிருக்கிறது.

முருகு அவர்களின் குடும்பத்தினர், மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்துடன் இணைந்து, ஏற்பாடு செய்திருக்கும் இந்த நிகழ்ச்சி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 20 அக்டோபர் 2024-ஆம் நாள் மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணிவரை கோலாலம்பூர் செந்தூல், ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயத்திலுள்ள செட்டியார்கள் மண்டபத்தில் நடைபெறுகிறது.

மஇகா தேசியத் துணைத் தலைவரும், தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான மாண்புமிகு டத்தோஸ்ரீ எம்.சரவணன் அவர்கள் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றுவார்.

#TamilSchoolmychoice

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் திரு. மோகனன் பெருமாள் வரவேற்புரையுடன் தொடங்கும் இந்த நிகழ்ச்சியில் முருகுவுடன் நெருங்கிப் பழகியவர்கள், அவரைப் பற்றிய நினைவுகளை இந்த நிகழ்ச்சியில் பகிர்ந்து கொள்ளவிருக்கின்றனர்.


மேலும் படிக்க: முருகு சுப்பிரமணியன் : மக்கள் நல எழுத்துகளைப் படைத்து ‘புதிய சமுதாயத்திற்காக’ சிந்தித்தவர் – சில நினைவுகள்


அமரர் முருகு சுப்பிரமணியன்

சிங்கப்பூரின் முனைவர் ஸ்ரீ லக்‌ஷ்மி, ‘முருகு என்னும் ஆளுமை’ என்னும் தலைப்பிலும், கவிஞர் பாதாசன் ‘முருகுவுடன் தமிழ்நேசன் அனுபவங்கள்’ என்னும் தலைப்பிலும் உரையாற்றுகின்றனர். இராமதாஸ் மனோகரன் ‘முருகுவுடனான புதிய சமுதாயம் பணி அனுபவங்கள்’ என்ற கோணத்திலும் இரா.முத்தரசன் ‘முருகுவுடன் புதிய சமுதாயம் அனுபவங்கள்’ என்ற கோணத்திலும் தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கின்றனர்.

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர் பெ.இராஜேந்திரன் ‘மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் வளர்ச்சிக்கு முருகுவின் பங்களிப்பு” என்ற தலைப்பில் உரை நிகழ்த்துவார்.

முருகு குறித்த சிறப்புக் கவிதை ஒன்றை கவிஞர் சீராகி படைப்பார்.

முருகு அவர்கள் குறித்த நிரந்தர இணையத் தளத்தை சிங்கப்பூரைச் சேர்ந்த பேராசிரியர் டாக்டர் சுப.திண்ணப்பன் தொடக்கி வைப்பார்.

முருகு அவர்களின் வாழ்க்கைக் குறிப்புகள், எழுத்துப் படைப்புகள், அடங்கிய சிறப்பு நினைவு மலர் ஒன்றும் இந்த நிகழ்ச்சியில் வெளியிடப்படும்.

முருகு குடும்பத்தினர் சார்பில் முருகுவின் புதல்வர் டாக்டர் கலைமணி ஏற்புரை நிகழ்த்துவார்.

முருகுவின் வாழ்க்கைப் பயணம், மலேசிய இந்திய சமூக மேம்பாட்டுக்கு அன்னாரின் பங்களிப்பு, முருகுவின் எழுத்தோவியங்கள் கொண்ட கண்காட்சி, ஆகிய அம்சங்கள் ‘முருகு நூற்றாண்டு விழா’ நிகழ்ச்சியில் மையமாக இடம் பெறும்.

ஊடகத் துறைக்கும், தமிழ் மொழிக்கும், மலேசிய இந்திய சமூகத்திற்கும் அளப்பரிய பணிகள் ஆற்றி மறைந்த முருகு என்ற மாமனிதரின் நினைவுகளைக் கொண்டாட, முருகு நூற்றாண்டு விழாவுக்கு ஏற்பாட்டுக் குழுவினர் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர்.