Home Photo News முருகு சுப்பிரமணியன் : மக்கள் நல எழுத்துகளைப் படைத்து ‘புதிய சமுதாயத்திற்காக’ சிந்தித்தவர் – சில...

முருகு சுப்பிரமணியன் : மக்கள் நல எழுத்துகளைப் படைத்து ‘புதிய சமுதாயத்திற்காக’ சிந்தித்தவர் – சில நினைவுகள்

859
0
SHARE
Ad
அமரர் முருகு சுப்பிரமணியன்

(தமிழ் நேசன் நாளிதழின் பல்லாண்டு கால ஆசிரியர் – பதிவு பெற்ற மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் முதலாவது தலைவர் – மலேசியாவில் தமிழ் மொழியும் இயக்கங்களும் வளர அயராது பாடுபட்டவர் – மக்களுக்கான பல நன்னெறி கருத்துகளைப் படைத்தவர் – என பன்முனைகளில் சமூகப் பணியாற்றி மறைந்தவர் முருகு சுப்பிரமணியன். 1924-ஆம் ஆண்டு அக்டோபர் 5-ஆம் தேதி பிறந்த அவருக்கு இது நூற்றாண்டு விழா. 10 ஏப்ரல் 1982-இல் மறைந்த அவரின் நினைவு நாளை முன்னிட்டு அவரின் சிறப்பியல்புகளையும், பண்புநலன்களையும் அவருடன் பழகிய அனுபவங்களையும் விவரிக்கிறார் இரா.முத்தரசன்)

ஐந்தாம் படிவத்திற்கான (இப்போது எஸ்பிஎம் – அப்போது எம்.சி.இ) தேர்வுகளை எழுதிவிட்டு நான் வேலை தேடிக் கொண்டிருந்த காலகட்டம்.

அப்போதே எழுத்தார்வம் காரணமாக பத்திரிகைகளில் கவிதைகளும் கட்டுரைகளும் சிறுகதைகளும் எழுதத் தொடங்கி இருந்தேன்.

#TamilSchoolmychoice

அப்போது ‘புதிய சமுதாயம்’ என்ற பெயரில் இரு வாரத்துக்கு ஒரு முறை வெளிவந்த தமிழ் இதழில் உதவி ஆசிரியர் வேலைக்கு ஆர்வமுள்ளவர்கள் தேவைப்படுவதாக கேள்விப்பட்டு நானும் விண்ணப்பித்தேன். நேர்முகத் தேர்வுக்கு அழைத்தார்கள்.

முருகுவுடனான முதல் சந்திப்பு

முருகு சுப்பிரமணியன்

அந்த பத்திரிக்கையை ஆசிரியராக இருந்து நடத்திக் கொண்டிருந்தவர் திரு முருகு.சுப்பிரமணியன். அவர்தான் எனக்கு நேர்முகத் தேர்வு நடத்தினார். அதுதான் ஆசிரியர் முருகுவுடனான எனது முதல் சந்திப்பு. நேர்முகத் தேர்வுக்குப் பின்னர் அந்த உதவி ஆசிரியர் வேலைக்கும் என்னைத் தேர்வு செய்தார்.

எனக்குள் தணியாத ஆர்வமாக தகித்துக் கொண்டிருந்த எழுத்தார்வம் காரணமாக, அந்தப் பணியில் நானும் உற்சாகத்துடன், மிகுந்த எதிர்பார்ப்புடன் பணியாற்றத் தொடங்கினேன்.

என் பத்திரிக்கை உலக வாழ்க்கையின் முதல் நுழைவும், முருகு.சுப்பிரமணியன் அவர்களுடனான குறுகிய கால இலக்கியப் பயணமும், நெருக்கமும் அங்குதான் தொடங்கியது.

 நேர்மையும், ஒழுக்கமும் நிறைந்த பத்திரிகையாளர்

தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கோனாபட்டு என்ற கிராமத்தை பூர்வீகமாக கொண்ட முருகு அவர்கள்  நகரத்தார் சமூகத்தைச் சேர்ந்தவர். தந்தையார் பெயர் முருகப்பன். முரு.சுப்பிரமணியன் என்ற பெயரில் எழுத்துப் பணிகளைத் தொடங்கிய அவரின் பெயரைப் புதுமையாக முருகு.சுப்பிரமணியன் என மாற்றியமைத்தவர் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்.

முருகு சுப்பிரமணியன் என்ற பெயருடன் எழுத்துலகில் பிரபலமாகி வலம் வந்தார். இளம் வயதிலேயே எழுத்தார்வம் காரணமாக பொன்னி என்ற மாத இதழை தமிழ்நாட்டில் புதுக்கோட்டையில் 1947-ஆம் ஆண்டிலேயே தொடங்கி நடத்தினார். 1950-ஆம் ஆண்டில் பொன்னி இதழ் சென்னைக்கு இடம் பெயர்ந்தது.

முருகு அவர்கள் வைத்திருந்த அந்த பத்திரிகைகளின் தொகுப்பை நான் நேரில் பார்த்திருக்கின்றேன்.  அந்த பத்திரிக்கையில் இளம் வயது கண்ணதாசன், திரைப்பட பாடல் ஆசிரியராக, பிரபலமாவதற்கு முன்பே எழுதிய கவிதையை வெளியிட்டு கண்ணதாசனை ஊக்குவித்தவர் முருகு சுப்ரமணியன் என்பது ஒரு  சுவாரசியமான தகவல்.

தான் நடத்திய பொன்னி இதழின் நினைவாக தன் மகளுக்கும் பொன்னி எனப் பெயர் சூட்டியிருந்தார் முருகு.

தமிழ் நாட்டில் பொன்னி இதழை நடத்தியவர் –
கண்ணதாசனை ஊக்குவித்தவர்

இளமையான முருகு சுப்பிரமணியன் மனைவியுடன்…

மலாயாவுக்கு ரஜூலா கப்பலில் வருகை

நிதிப் பற்றாக்குறையால் 1953-இல் பொன்னி நிறுத்தப்பட்டது. அப்போது மலாயாவில் வெளிவந்து கொண்டிருந்த தமிழ் நேசன் நாளிதழின் துணை ஆசிரியராக பணியாற்ற ரஜூலா கப்பலில் கோலாலம்பூர் வந்தார் முருகு.

தமிழ் நேசனில் சுமார் ஓராண்டு காலம் பணியாற்றிய பின்னர் சிங்கப்பூர் சென்று, தமிழ் முரசு நாளிதழில் பணியாற்றினார் முருகு. பின்னர் மீண்டும் மலேசியா வந்த அவர் தமிழ் நேசன் நாளிதழின் ஆசிரியராகப் பொறுப்பேற்று பல ஆண்டுகள் சிறந்த முறையில் செயலாற்றினார். தமிழ் நேசனை நாட்டின் முன்னணி நாளிதழாகக் கொண்டு சென்றதில் – தக்க வைத்துக் கொண்டதில் – அவரின் பத்திரிகை அனுபவம் பெரிதும் கைகொடுத்தது.

அந்த காலகட்டத்தில் (1962-1963) மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்தை தோற்றுவித்த முன்னோடிகளில் ஒருவராக திகழ்ந்தார். பதிவு பெற்ற மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் முதல் தலைவரும் முருகு சுப்பிரமணியன்தான்!

தமிழ் நேசன் நாளிதழின் ஆசிரியராக அவர் பணியாற்றியபோது அவரின் ஒழுக்கத்தையும், நேரக் கட்டுப்பாட்டையும், கடமை உணர்வையும் அவருடன் பணியாற்றியவர்கள் சிலாகித்துப் பேசுவார்கள். காலையில் தமிழ் நேசன் அலுவலகத்திற்கு வந்து விடும் அவர் மதியம் வரை பணியாற்றி விட்டு பின்னர் இல்லம் திரும்பி மதிய உணவுக்கு பின்னர் சிறிது ஓய்வெடுத்து விட்டு மீண்டும் அலுவலகம் வந்து இரவு வரை பத்திரிக்கைப் பணிகளைக் கவனிப்பாராம்!

முருகு சுப்பிரமணியன் குடும்பத்தினர் – பின்வரிசையில் முருகுவின் புதல்வர் பாண்டியன், புதல்வி
பொன்னி, புதல்வர் டாக்டர் கலைமணி. அமர்ந்திருப்பவர்கள் – திருமதி சந்திரா
செல்வம், புதல்வர் செல்வம், முருகுவின் தாயார் சிவகாமி ஆச்சியார்,
முருகுவின் இளையமகன் சுப்பையா, முருகுவின் துணைவியார் வள்ளியம்மை
ஆச்சியார்

தமிழ் நேசன் ஆசிரியராக…எழுத்தாளர் சங்கத் தலைவராக…

முருகு ஆசிரியராகப் பொறுப்பேற்று தமிழ் நேசனில் கொண்டுவந்த மாற்றங்கள் மலேசியத் தமிழ் இலக்கிய உலகிலும் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தின. பல இளம் எழுத்தாளர்களை அவர் தமிழ் நேசன் வழி ஊக்குவித்தார். தமிழ் நேசன் ஞாயிறு மலர் என்பது தமிழ் நாட்டின் வார இதழ்களுக்கு இணையாக, சிறுகதை, தொடர்கதை, கவிதை, கட்டுரைகள் என பலவகையான இலக்கியப் படைப்புகளோடு வெளிவந்தது.

முருகு தமிழ் நேசன் ஆசிரியராக இருந்து நடத்திய சிறந்த சிறுகதைக்கான மாதம் ஒருமுறை ‘பவுன் பரிசு திட்டம்’ மலேசிய சிறுகதை எழுத்தாளர்களிடையே உத்வேகத்தை அளித்து, இன்றுவரை பேசப்படும் பல சிறந்த சிறுகதைகள் வெளிவரக் காரணமாக அமைந்தது எனலாம்.

நிகழ்ச்சி ஒன்றில் சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோ ஹருணுடன் (இடம்)

தமிழ் நேசன் பவுன் பரிசு திட்டம்

முருகு ஆசிரியராகப் பொறுப்பேற்று தமிழ் நேசனில் கொண்டுவந்த மாற்றங்கள் மலேசியத் தமிழ் இலக்கிய உலகிலும் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தின. பல இளம் எழுத்தாளர்களை அவர் தமிழ் நேசன் வழி ஊக்குவித்தார். தமிழ் நேசன் ஞாயிறு மலர் என்பது தமிழ் நாட்டின் வார இதழ்களுக்கு இணையாக, சிறுகதை, தொடர்கதை, கவிதை, கட்டுரைகள் என பலவகையான இலக்கியப் படைப்புகளோடு வெளிவந்தது.

முருகு தமிழ் நேசன் ஆசிரியராக இருந்து நடத்திய சிறந்த சிறுகதைக்கான மாதம் ஒருமுறை ‘பவுன் பரிசு திட்டம்’ மலேசிய சிறுகதை எழுத்தாளர்களிடையே உத்வேகத்தை அளித்து, இன்றுவரை பேசப்படும் பல சிறந்த சிறுகதைகள் வெளிவரக் காரணமாக அமைந்தது எனலாம்.

தமிழ் நேசனில் இருந்து விலகல்…
புதிய சமுதாயம் தொடக்கம்…

தமிழ் நேசன் நிர்வாகத்தினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ஆசிரியர் பொறுப்பில் இருந்து 1976-ஆம் ஆண்டு  வாக்கில் அவர் அங்கிருந்து விலகினார்.  அதன் பின்னர் தன் பத்திரிகை அனுபவம் காரணமாக ‘புதிய சமுதாயம்’ என்ற -இரு வாரங்களுக்கு ஒரு முறை வெளிவரும் பத்திரிகை ஒன்றை அவர் 1977 முதல் நடத்தினார். சில நண்பர்கள் அவருக்கு தொழில் ரீதியாக அந்தத் திட்டத்தில் தோள் கொடுத்தனர்.

கால ஓட்டத்தில் புதிய சமுதாயத்தை வாரப் பத்திரிக்கையாக கொண்டு வர வேண்டும் என்பதுதான் அவரது இலக்கு.

அப்போது புதிய சமுதாய பத்திரிக்கை அலுவலகம் ஜாலான் துவாங்கு அப்துல் ரகுமானில் (அப்போது பத்து ரோட்) – சோத்திர்மால் (Chotirmal) என்ற துணிக்கடை அமைந்திருந்த – கட்டிடத்தின் 2-வது மாடியில் அமைந்திருந்தது.

அந்த சமயத்தில் புதிய சமுதாயம் பத்திரிக்கையில் துணை ஆசிரியர்களாக கவிஞர் பாதாசன் அவர்களும் பின்னர் சூரியன் பத்திரிக்கை ஆசிரியராக இருந்த ராமதாஸ் மனோகரன் அவர்களும் பணியாற்றினர்.  ஓர் பட்டதாரி ஆசிரியராகப் பள்ளியில் பணிபுரிந்த ஆறுமுகம் என்ற கவிஞர் நகைச்சுவை பித்தன் பகுதி நேர துணை ஆசிரியர்களில் ஒருவராக புதிய சமுதாயத்தில் தன் பங்களிப்பை வழங்கினார்.

புதிய சமுதாயப் பத்திரிகையில் ஓவியர்களாக (அமரர்) வேலவனும் ஓவியர் சந்திரனும் பணியாற்றினர்.

தமிழ்நாட்டிலிருந்த ஓவியக் கல்லூரியில் கல்வியும் பயிற்சியும் பெற்று நாடு திரும்பிய இளைஞரான சந்திரனுக்கு புதிய சமுதாயம் பத்திரிக்கையில் ஓவியங்கள் வரைய வாய்ப்பு தந்தவர் முருகு சுப்பிரமணியன். இன்று சந்திரன் நாட்டின் பிரபல முன்னணி ஓவியர்களில் ஒருவராக திகழ்கிறார்.  பல அழகான பிரமிப்பூட்டும் ஓவியங்களை படைத்தவர் அவர்.  அவருக்கான ஆரம்ப கால வாய்ப்புகளை தன் பத்திரிகையின்வழி வழங்கியவர் முருகு சுப்பிரமணியன்.

திருக்குறளுக்கு விளக்கக் கட்டுரை எழுதினார்…

புதிய சமுதாயம் பத்திரிகை அலுவலகத்தில் நான் பணியாற்றிய ஓராண்டு காலத்தில் முருகுவுடன் பல இனிய அனுபவங்கள் ஏற்பட்டன.

முருகுவுக்கு மிகவும் பிடித்த நூல் திருக்குறள். எப்போதும் தன் மேசையில் திருக்குறளை வைத்திருப்பார். திருக்குறளுக்கு விளக்கக் கட்டுரைகளை அவர் ஒவ்வொரு புதிய சமுதாயம் இதழிலும் தொடர்ச்சியாக மிகுந்த விருப்பத்துடன் எழுதி வந்தார். வாய்மொழியாக அவர் சொல்லச் சொல்ல பிறர் எழுதிக் கொடுப்பது அவரின் பாணி. அந்த வகையில்  அந்த திருக்குறள் கட்டுரைகளை, நான் அங்கு பணியாற்றிய காலத்தில் என்னை அழைத்து எழுதச் சொல்வார். தன் திருக்குறள் சிந்தனைகளை அடுக்கடுக்கான வார்த்தைப் பிரயோகங்களின் வழி தங்கு தடையின்றி, இடைநிறுத்தம் இன்றி வழங்குவார். அலுவலகத்திலும், இல்லத்திலும் எப்போது, எங்கு, வசதியோ அங்கேயே அமர்ந்து, எந்த மேற்கோள்களையும், மற்ற நூல்களையும் எடுத்துப் பார்க்காமல், முழுக்க முழுக்க தன் சிந்தனையிலேயே அந்தக் கட்டுரைகளை அவர் படைப்பார்.

ஆசிரியருக்கு, திறந்தவெளியில் இயற்கைச் சூழலில் அமர்ந்து கொண்டு எழுதுவது என்பது மிகவும் பிடித்தமான ஒன்று. அதன் காரணமாக அவர் அடிக்கடி காரில்  என்னை அழைத்துக் கொண்டு அருகிலிருந்த லேக் கார்டன் செல்வார்.

லேக் கார்டனில் அமர்ந்து கொண்டு, அவர் சொல்ல சொல்ல திருக்குறள் குறித்த கட்டுரைகள் எழுதிய இனிய காட்சிகள் நினைவில் வந்து மறைகின்றன. அந்த சமயங்களில் அங்கு யாராவது ஐஸ்கிரீம் விற்பவர்கள் வந்தால், ஐஸ்கிரீம் வாங்கி சாப்பிட்டுக் கொண்டே – எனக்கும் வாங்கிக் கொடுத்து விட்டு – தன் எழுத்துப் பணியைத் தொடர்வார்.

மெர்டேக்கா தினத்தில் பிறந்தவர்களை ஒருங்கிணைத்தார்…

முருகு சுப்பிரமணியன் குடும்பத்தினருடன்….

புதிய சமுதாயம் பத்திரிக்கையின் ஆசிரியராகப் பல புதுமைகளை அவர் செய்தார். பல மக்கள் நலக் கட்டுரைகள் பல அந்த இதழில் வெளிவந்தன.

1978 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 – நமது நாட்டின் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டபோது ஒரு புதுமையான திட்டத்தை அவர் செயல்படுத்தினார். அதன்படி 1957-ஆம் ஆண்டு சுதந்திர தினத்தன்று பிறந்த இந்தியர்களை புதிய சமுதாயத்திற்கு விண்ணப்பிக்கச் சொல்லி, அவர்களுக்காக 2 நாட்கள் கோலாலம்பூர் சுற்றுலா ஏற்பாடு செய்தார். சுமார் 15 முதல் 20 பேர் வரை அந்தத் திட்டத்தில் இணைந்து நாட்டின் பல திசைகளில் இருந்து கோலாலம்பூர் வந்தனர். புதிய சமுதாயம் பணியாளர்கள் என்ற முறையில் நாங்களும் அந்தச் சுற்றுலாவில் கலந்து கொண்டோம்.

அந்தச் சுற்றுலா நடந்த சமயத்தில் துன் சம்பந்தன் (அப்போது அவர் மஇகா தேசியத் தலைவர் பதவியை வகிக்கவில்லை – ஒற்றுமைத் துறை வாரியத் தலைவராக இருந்தார்) தன் இல்லத்தில் நடத்திய தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பில், மெர்டேக்கா தினத்தன்று பிறந்தவர்களை அழைத்துச் சென்று சம்பந்தனுக்கு அறிமுகப்படுத்தினார். நாங்கள் யாரும் எதிர்பாராத விதமாக – துன் சம்பந்தனின் தீபாவளி உபசரிப்பில் கலந்து கொள்ள அப்போது நமது முன்னாள் பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மான் வந்ததும், அந்த உபசரிப்பில் எங்களுடன் பங்கு கொண்டதும் மறக்க முடியாத அனுபவம்!

இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை வெளிவந்த புதிய சமுதாயம் பத்திரிக்கை நான் பணியில் சேர்ந்த ஓராண்டுக்கு பின்னர் மாதம் ஒரு முறை பத்திரிக்கையாக – செலவினங்களைக் குறைக்கும் நோக்கில் மாற்றம் கண்டது.

அதன் காரணமாக. அங்கு முன்பு போல் உதவி ஆசிரியர்கள் அதிக அளவில் தேவைப்படவில்லை.  அதன் காரணமாக நான் புதிய சமுதாயத்தில் இருந்து விலகி வேறு பணிக்குச் செல்ல நேர்ந்தது.

புதிய சமுதாயத்தில் இருந்து வெளியேறிய பின்னரும் ஆசிரியர் முருகுவுடனான பொது நிகழ்ச்சி சந்திப்புகள் தொடர்ந்தன. அவரின் புதல்வர்களுடன் தொடர்ந்து இன்றுவரை தொடர்பில் இருந்து வருகிறேன். துரதிஷ்டவசமாக அடுத்த சில ஆண்டுகள் கழிந்து 1982-இல் அவர் காலமானார்.

நான் புதிய சமுதாயம் பத்திரிக்கையில் பணியாற்றியபோது  முருகு அவர்களின் புதல்வர்கள் என்ற முறையில் செல்வம், பாண்டியன், டாக்டர் கலைமணி ஆகியோருடன் ஏற்பட்ட அறிமுகம், இன்றுவரையும் நட்பாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

முருகு சுப்பிரமணியத்தின் இனிய நினைவுகளையும், மலேசியாவில் தமிழ் மொழி, இலக்கிய வளர்ச்சிக்கான அவரின் தன்னலமற்ற பங்களிப்பையும் என்றும் போற்றுவோம்! நினைவில் கொள்வோம்!

-இரா.முத்தரசன்