Home நாடு பேராசிரியர் டாக்டர் பி.இராமசாமியின் மூத்த சகோதரி முத்தம்மாள் காலமானார்!

பேராசிரியர் டாக்டர் பி.இராமசாமியின் மூத்த சகோதரி முத்தம்மாள் காலமானார்!

365
0
SHARE
Ad
அமரர் முத்தம்மாள் பழனிசாமி

சித்தியவான் : பினாங்கு மாநிலத்தின் முன்னாள் துணை முதல்வரும் உரிமை கட்சியின் தலைவருமானா பேராசிரியர் டாக்டர் பி. இராமசாமியின் மூத்த சகோதரியும் எழுத்தாளருமான முத்தம்மாள் பழனிசாமி இன்று புதன்கிழமை (ஏப்ரல் 10) மதியம் காலமானார்.

அன்னாரின் நல்லுடல் சித்தியவானில் கீழ்க்காணும் முகவரியில் இறுதி மரியாதை செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருக்கும். அன்னாரின் இறுதிச் சடங்குகள் நாளை வியாழக்கிழமை (ஏப்ரல் 11) நண்பகல் 12.00 முதல் பிற்பகல் 2.00 மணிவரை கீழ்க்காணும் முகவரியில் நடைபெறும்:

34, Lorong Pegawai 1, Taman Pegawai, Sitiawan, Perak

இறுதிச் சடங்குகளுக்குப் பின்னர் அன்னாரின் நல்லுடல் சித்தியவானில் உள்ள இந்து சபா இடுகாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்படும்.

#TamilSchoolmychoice

தொடர்புக்கு : கல்யாணசுந்தரம் 019-8136798

தங்கள் குடும்பத்தினரின் பூர்வீக வரலாற்றையும், தங்களின் தந்தையார் எவ்வாறு தமிழ் நாட்டிலிருந்து மலாயா வந்து சித்தியவான் பகுதியில் குடியேறினார், தங்களின் குடும்பத்தைக் கட்டமைத்தார் என்பது குறித்து முத்தம்மாள் ‘நாடு விட்டு நாடு’ என்ற நூலில் விரிவாக எழுதியுள்ளார்.

வல்லினம் ம.நவீன் வழங்கிய இரங்கல் செய்தி

முத்தம்மாள் பழனிசாமி மறைவு குறித்து சமூக ஊடகங்களில் வல்லினம் இணைய ஊடகத்தின் ஆசிரியர் ம.நவீன் பின்வருமாறு பதிவிட்டார்:

“2013இல் எனக்கு அவர் அறிமுகம். இயக்குனர் ராம் சொல்லியே ‘நாடு விட்டு நாடு’ என்ற அவரது தன் வரலாற்று நூலை வாசித்தேன். உடனே அவரைத் தொடர்பு கொண்டு நேர்காணல் ஒன்றும் செய்தேன். பின்னர் அந்நூலுக்கான அறிமுக விழா ஒன்றை அவ்வருடமே செய்து அவருடனான இலக்கிய உரையாடல் ஒன்றையும் நிகழ்த்தினேன். அந்நிகழ்ச்சிக்குப் பின் அவர் மீது பரவலான கவனம் விழுந்தது.

அப்போதுதான் அவர் ‘நாட்டுப்புற பாடல்களில் என் பயணம்’ எனும் நூலை வெளியிட்டிருப்பது தெரிந்தது. சயாம் மரண இரயில் குறித்த ஓர் ஆவண நூலை வெளியிட அவருக்கு ஆர்வம் இருந்தது. தான் சேகரித்த தரவுகளை என்னிடம் கொடுத்து நூலாக்கச் சொன்னார். அத்தனையும் ஆங்கிலத்தில் இருந்தன. அது குறித்து மேலும் விரிவான நூல்கள் வெளிவந்திருந்ததால் பதிப்பிக்கவில்லை.

முத்தம்மாள் பழனிசாமியின் ‘நாடு விட்டு நாடு’ மலேசிய இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க நூல் என்பதில் சந்தேகம் இல்லை. தமிழில் எழுதப்பட்ட தன் வரலாற்று நூல்களிலும் முக்கியமான ஆக்கமே.

முத்தம்மாள் பழனிசாமி சமீப காலமாக நினைவுகளை இழந்துள்ளதை அவர் மகள் ராஜி வழி அறிந்தேன். ‘தமிழினி’ பதிப்பில் வந்த ‘நாடு விட்டு நாடு’ சில காலமாக அச்சில் இல்லாததால் அதை மறுபதிப்பு செய்ய வேண்டுமென அவர் மகளிடம் தொடர்ந்து கேட்டுக்கொண்டதில் கவின் பதிப்பகம் மூலம் அம்முயற்சி கடந்த ஆண்டு சாத்தியமானது. மேலும் எழுத்தாளர் விஜயலட்சுமி முன்னின்று நடத்தும் ‘ஒலிப்பேழை’ யூடியூப் தளத்தில் இந்நூல் ஒலிவடிவாகவே முழுமையாகக் கேட்கக் கிடைக்கிறது.

முத்தம்மாள் பழனிசாமி அவர்கள் குறித்த அத்தனை குறிப்புகளும் இப்போது தமிழ் விக்கியில் கிடைக்கிறது. அவர் தன் வாழ்க்கை வரலாற்றை எழுதியது தன் பேரப்பிள்ளைகளுக்காக! தன்னை அடையாளம் காட்டிக்கொள்ள எவ்வித ஆர்வமும் இல்லாத ஆளுமை அவர். அங்கதமும் துடிப்பும் எப்போதும் அவரிடம் இணைந்தே இருந்தன. ஃபோர் வில் (HULUX) வண்டியை அவர் கம்பீரமாக ஓட்டிவரும் தோரணை இன்னும் நினைவில் உள்ளது. 4095 மீட்டர் உயரமான கோத்தா கினா பாலு மலையில் அவர தனது 75வது வயது வரை ஏறிக்கொண்டே இருந்தார்.

92 வயதில் இன்னும் உயரத்தில் இருந்த மரணத்தைச் சென்று தொட்டுள்ளார். அந்த கம்பீரம் குறையாமல்; அந்த அங்கதம் மறையாமல்”.