வாஷிங்டன் : (மலேசிய நேரம் பிற்பகல் 2.45 மணி நிலவரம்) நேற்று செவ்வாய்க்கிழமை நவம்பர் 5-ஆம் தேதி நடைபெற்ற அமெரிக்க அதிபருக்கான தேர்தலில் ஆரூடங்களுக்கு மாறாக முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றிருக்கிறார்.
கமலா ஹாரிஸ் தோல்வியைத் தழுவியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளின்படி வெற்றி பெற 270 தேர்தல் வாக்குகள் தேவை என்ற நிலையில் இதுவரையில் 246 வாக்குகளை டிரம்ப் பெற்றிருக்கிறார்.
கமலா ஹாரிஸ் 187 வாக்குகளை மட்டுமே பெற்றிருக்கிறார். டிரம்ப் அதிகாரபூர்வமாக வெற்றி பெற இன்னும் 24 வாக்குகள் மட்டுமே தேவை.
இதற்கிடையில் செனட் சபைக்கான தேர்தலிலும் டிரம்ப் தலைமையிலான குடியரசுக் கட்சி வெற்றி பெற்று செனட் என்னும் நாடாளுமன்ற மேலவையில் பெரும்பான்மையைக் கைப்பற்றியிருக்கிறது. 100 இடங்களைக் கொண்ட செனட் அவையில் குடியரசுக் கட்சி 51 இடங்களைப் பெற்றிருக்கிறது. 41 இடங்களை ஜனநாயகக் கட்சி கொண்டிருக்கிறது.
அமெரிக்க அதிபர் தேர்தலின் முடிவுகள் அமெரிக்க நாட்டின் தலையெழுத்தை மட்டுமின்றி, உலக அரசியல் அரங்கிலும் மாற்றங்களை ஏற்படுத்தவிருக்கின்றன.
2 பில்லியன் டாலருக்கும் மேல் கடன் வைத்திருப்பதாகக் கூறப்படும் டிரம்ப் மீதான வழக்குகளின் நிலைமை இனி என்னவாகும் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.