(கடந்த 2 டிசம்பர் 2024-இல் மலேசியா ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் இந்தியாவின் கொல்கத்தா நகருக்கு மீண்டும் தனது சேவைகளைத் தொடங்கியதை முன்னிட்டு, அந்த முதல் விமானப் பயணத்தில் இடம் பெற்ற மலேசிய இந்திய ஊடகவியலாளர்கள் குழுவில் பங்கு பெற்ற இரா.முத்தரசன் கொல்கத்தா நகரின் சில அனுபவங்களை இந்தப் பயணக் கட்டுரையில் விவரிக்கிறார்)
- ஆன்மீக, வரலாற்றுபூர்வ தலங்களின் நகரம்
- காளி தெய்வக் கோயில்களைக் கொண்டாடும் மக்கள்
- இலக்கியமும், கலாச்சாரமும் போற்றப்படும் சூழல்
- அப்பழுக்கற்ற அன்னை தெரசா மீளாத் துயில் கொண்ட மண்!
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த டோமினிக் லேப்சியர் என்ற (Dominique Lapierre) என்ற பிரபல எழுத்தாளர் இந்தியா குறித்த பல வரலாற்று நூல்களையும் நாவல்களையும் எழுதியவர். பிரீடம் எட் மிட் நைட் (Freedom at Midnight) என்பது அவர் இணைந்து எழுதிய புகழ் பெற்ற நூல். கல்கத்தாவின் வறுமை மிகுந்த சேரிப் பகுதிகளின் வாழ்க்கை குறித்து 1985-இல் டோமினிக் எழுதிய நாவல் சிட்டி ஆஃப் ஜோய் (the City of Joy) – தமிழில் கொண்டாட்ட நகர் அல்லது உற்சாக நகர் எனப் பொருள் கொள்ளலாம்.
அப்போது கல்கத்தாவாக இருந்த மேற்கு வங்காள மாநிலத்தின் தலைநகர் இப்போது கொல்கத்தாவாக மாறிவிட்டது. எனினும் எழுத்தாளர் டோமினிக் சூட்டிய ‘சிட்டி ஆஃப் ஜோய்’ என்ற நாவல் தலைப்புதான் இன்றுவரை கொல்கத்தாவைக் குறிக்கும் சொல்லாடலாக நிலைத்து விட்டது. நகரெங்கும் இந்த வாசகத்தைத்தான் பெரிய அளவில் பதித்து வைத்திருக்கிறார்கள்.
நமது நாட்டின் மலேசிய ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் 18 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கொல்கத்தாவுக்கான தனது சேவையை 2 டிசம்பர் 2024-இல் தொடங்கிய நிலையில் அந்தப் பயணத்தில் இணைந்து கொள்ளும் இந்திய ஊடகவியலாளர்கள் குழுவில் இடம் பெறும் வாய்ப்பு கிடைத்தது. அதற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைத்தவர் கிள்ளான் கேபிஎஸ் டிராவல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் கே.பி.சாமி.
முதலில் ஒருநாள் பயணம்தான் என்றும் அடுத்த நாள் நாடு திரும்பிவிடுவோம் என்றும் கூறப்பட்டது. பின்னர் விரும்பினால் 4 நாட்களுக்கான பயணமாக விரிவு செய்து கொள்ளலாம் – தங்கும் விடுதியும் வழங்கப்படும் என்ற வாய்ப்பு முன்மொழியப்பட்டபோது எங்களில் சிலர் அதனைப் பயன்படுத்திக் கொண்டோம்.
மிகப் பிரம்மாண்ட வளர்ச்சி கண்டிருக்கும் கொல்கத்தா
ஒரு காலத்தில் இந்தியாவிலேயே மிக அசுத்தமான நகரம் என்ற அவப் பெயரைப் பெற்றிருந்த நகர் கொல்கத்தா. ஆனால் இப்போதோ முற்றிலும் மாறிவிட்டது. அகண்ட சாலைகள், குப்பை கூளங்கள் இன்றி தூய்மையாகத் தோற்றம் தருகின்றன. நகரை விட்டு புறநகர்களுக்கு சென்றால் இன்னும் தூய்மையின் முக்கியத்துவம் அங்கு பேணப்படவில்லை என்பதைக் காண முடிகிறது.
புதிய நில மேம்பாட்டுத் திட்டங்கள் தொடங்கப்பட்டிருப்பதால் எங்கு பார்த்தாலும் 20 அல்லது 30 மாடிகளைக் கொண்ட கட்டடங்கள் – குடியிருப்புகளைப் பார்க்க முடிகிறது.
நகரின் மற்றொரு சிறப்பு, நகருக்குள் பாய்ந்து வலம் வரும் கங்கை நதி. அதனை இங்கே ஹூக்ளி நதி என அழைக்கிறார்கள். படகுகள், சிறு ரக கப்பல்கள் பயணிக்கும் அளவுக்கு விஸ்தீரணம் கொண்டிருக்கிறது.
இவற்றுக்கு நடுவில் எங்கு பார்த்தாலும் காற்றின் தூய்மைக் கேட்டால் நகரை பனிமூட்டம் போன்று வெண்புகை மண்டலம் சூழ்ந்திருக்கிறது.
ஹவுரா இரும்புப் பாலம்
கொல்கத்தாவின் நிரந்தர அடையாளங்களில் ஒன்று ஹவுரா இரும்புப் பாலம். ஹூக்ளி நதியின் இரு கரைகளை இணைக்கிறது. 1943-இல் பிரிட்டிஷார் கட்டியது. இருபுறமும் வாகனங்களுக்கான பாதையும், நடந்து செல்பவர்களுக்கு நடைபாதையும் கொண்டிருக்கின்றது. நடைபாதைகளில் சுமார் 10 அடி உயரத்திற்கும் மேற்பட்ட உறுதியான தடுப்பு வேலிகள்! தடுமாறி ஆற்றில் விழாமல் இருப்பதற்கும், தற்கொலை முயற்சிகளை யாரும் மேற்கொள்ளாதிருப்பதற்கும்!
வாகனங்கள் கடந்து செல்ல முடியுமே தவிர எங்கேயும் நிறுத்த முடியாது. பாலத்தின் விசேஷம் – முழுக்க முழுக்க திருகாணிகள் போன்ற இரும்பு துண்டுகளைக் கொண்டு இணைக்கப்பட்டு உருவாக்கப்பட்டிருப்பதுதான்! வழக்கமான திருகாணிகள் – நட், போல்ட் (Nuts and Bolts) – போன்ற இரும்பினால் ஆன இணைப்பு சாதனங்கள் பயன்படுத்தப்படவில்லை. இன்றும் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்லும் அளவுக்கு உறுதியாக நிற்கிறது.
அன்னை தெரசா வாழ்ந்த – மறைந்த – இல்லம்
கொல்கத்தா என்றதுமே அனைவருக்கும் நினைவுக்கு வருவது அன்னை தெரசாவின் முகமும் அவரின் சேவைகளும்தான். அவர் பல்லாண்டுகளாக வாழ்ந்து சேவை செய்த இல்லத்திலேயே நல்லடக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.
அந்தப் புனிதமான இல்லத்தில் வலம் வந்ததும், அவரின் சமாதியைத் தரிசித்ததும், அவர் நடைபயின்ற, பிரார்த்தனை செய்த இடங்களில் நாமும் அமர்ந்ததும் நெகிழ்ச்சியான, உணர்வுபூர்வமான தருணங்கள்.
காளி ஆலயங்கள் …
மேற்கு வங்காளத்தில் பல இடங்களில் காளி ஆலயங்களுக்கு முக்கியத்துவம். மக்களும் இலட்சக் கணக்கில் கூடுகிறார்கள். சிவன், விஷ்ணு, ஆலயங்கள் இரண்டாம் பட்சம்தான்.
உலகின் 51 சக்தி பீடங்களில் ஒன்று என்பதற்காக – கொல்கத்தா காலிகட் காளி ஆலயம் சென்றால் – அங்கு நமக்குக் கிடைப்பதோ மோசமான அனுபவங்கள். பயண வழிகாட்டிகளும் பூசாரிகளும் நம்மிடம் பணம் பிடுங்குவதிலேயே குறியாக இருக்கிறார்கள். தொகைகளையும் அவர்களே வாய்விட்டுக் கேட்டு நிர்ணயிக்கிறார்கள். கொடுக்காவிட்டால் தள்ளிவிடாத குறையாக விரட்டி அடிக்கிறார்கள்.
இத்தனைக்கும் நடுவில் காளிமாதாவைத் தரிசிக்க முண்டியடித்துக் கொண்டு ஆயிரக்கணக்கானோர் கூடுகிறார்கள்.
கோயிலுக்குள்ளேயே ஒருபுறத்தில், பரிதாபத்துக்குரிய ஆடுகள் உயிருடன் பலியிடப்பட்டு அதன் ரத்தம் படையலாக படைக்கப்படும் காட்சிகள் கொடூரமும், சோகமும் நிறைந்தவை!
மாறுபட்ட – தட்சிணேஸ்வரம் காளி கோயில்
விவேகானந்தரின் குருவான இராமகிருஷ்ண பரஹம்சர் ஒரு பூசாரியாக பணியாற்றிய ஆலயம் தட்சிணேஸ்வரம் காளி கோயில். இந்த ஆலயம்தான் நாடெங்கும் அலைந்து திரிந்த விவேகானந்தர், தன் ஆன்மீகக் குருவான இராமகிருஷ்ணரைச் சந்தித்து சந்நியாசம் பெற்ற இடம். கங்கை நதியின் ஓரத்தில் அழகான சூழலில் அமைந்திருக்கிறது.
இளம் வயது முதல் இராமகிருஷ்ணர்-விவேகானந்தர் வாழ்க்கையின் அற்புதங்களை நான் படித்து வந்திருப்பதால், அவர்களின் வாழ்க்கையில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த அந்த ஆலயத்தில் வலம் வந்ததும், அமர்ந்ததும் காளிமாதாவை தரிசனம் செய்ததும், அற்புதமான உணர்வுகளைத் தந்தது.
வரிசையாக 12 சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள். மிகப் பிரம்மாண்டமான, எழில் கொஞ்சும் வடிவமைப்புடன், பரந்து விரிந்த நிலப்பரப்பில், மிகத் தூய்மையாகப் பராமரிக்கப்படும் ஆலயம். பாதுகாப்புகளும் மிகக் கடுமை. உள்ளே புகைப்படங்களும் எடுக்க முடியாது.
கொல்கத்தாவில் கண்டிப்பாகக் காண வேண்டிய – தரிசிக்க வேண்டிய – தலம் தட்சிணேஸ்வரம் காளி ஆலயம்!
பேலூர் இராமகிருஷ்ண மடம்
தனது குரு இராமகிருஷ்ணரின் போதனைகளை உலக அளவில் பரப்பும் நோக்கில் சுவாமி விவேகானந்தர் பல இடங்களில் இராமகிருஷ்ண மடங்களை நிறுவினார். அவற்றின் தலைமையகம் அமைந்திருப்பது கொல்கத்தாவின் பேலூர் என்ற பகுதியில்! அங்கேயே இராமகிருஷ்ணருக்காக விவேகானந்தர் அமைத்திருக்கும் ஆலயம் பிரம்மாண்டமும் கலைத் திறனும், நுணுக்கமான வடிவமைப்பும், நவீனக் கட்டடக் கலையும் ஒருங்கிணைந்த அற்புதப் படைப்பு! இதுவும் கங்கைக் கரையோரம் கம்பீரமாக எழுந்து நிற்கிறது.
இராமகிருஷ்ணரின் சீடர்களுக்கும் வரிசையாக உருவச் சிலைகள் இங்கே நிர்மாணிக்கப்பட்டிருக்கின்றன. இராமகிருஷ்ணரின் மனைவி அன்னை சாரதா அம்மையாரையும் நினைவு கூரும் வகையில் நினைவிடங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
இரபீந்திர நாத் தாகூர் நினைவிடம்
மேற்கு வங்காள மாநிலத்தினர் – பொதுவாக வங்காள மொழி பேசும் அனைவரும் – கொண்டாடும் இலக்கியகர்த்தா இரபீந்திரநாத் தாகூர். காரணங்கள் நிறைய! 1913-ஆம் ஆண்டில் நோபல் பரிசை இந்தியாவுக்குப் பெற்றுத் தந்த முதல் இந்தியர் – இலக்கியத்துக்கு நோபல் பெற்ற முதல் ஐரோப்பியர் அல்லாத படைப்பிலக்கியவாதி – வங்காள தேசம், இந்தியா ஆகிய இரண்டு நாடுகளின் தேசிய கீதங்களையும் எழுதியவர் – மேற்கு வங்காள மாநிலத்தின் தேசிய கீதத்தையும் படைத்தவர் – என அடுக்கிக் கொண்டே போகலாம்.
மிகப் பெரிய பணக்காரக் குடும்பத்தில் பிறந்திருந்தாலும், இலக்கியத்துக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். அவர் வாழ்ந்து மறைந்த பிரம்மாண்டமான ஜமீன் இல்லம் சிறந்த முறையில் பராமரிக்கப்படுகிறது. ஒவ்வொரு அறையிலும் அவர் பயணம் செய்த நாடுகள் தொடர்பான புகைப்படங்கள், பொருட்கள் சேகரிக்கப்பட்டு பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருக்கின்றன.
பல நாடுகளுக்குப் பயணம் செய்த இரபீந்திரநாத் தாகூர், 1927-இல் தாய்லாந்து வருகையை முடித்துக் கொண்டு, பேங்காக்கில் இருந்து பினாங்குக்கு ரயில் மூலம் வந்தார். அன்றைய மலாயாவின் கோலாலம்பூர், மூவார், மலாக்கா நகர்களுக்கும் சிங்கப்பூருக்கும் சுற்றுலா மேற்கொண்டார் இன்னொரு வரலாற்றுச் செய்தி.
யோகானந்த பரஹம்சரின் ஆசிரமம்
இந்தியாவின் ஆன்மீக நூல்களில் பல மொழிகளிலும் வெளியிடப்பட்டு, கோடிக்கணக்கான எண்ணிக்கையில் விற்பனையாகி – இன்றும் பல்லாயிரக்கணக்கானோர் ஆர்வம் குன்றாமல் படித்து வரும் நூல் ‘ஆட்டோபையோகிராபி ஆஃப் எ யோகி’ (Authobiography of a Yogi). 1945-ஆம் ஆண்டு வாக்கில் யோகி யோகானந்த பரஹம்சர் தன் ஆன்மீக அனுபவங்களை இந்த நூலில் பதிவு செய்து வெளியிட்டார். தமிழில் ‘ஒரு யோகியின் சுயசரிதம்’ என்ற பெயரில் வெளியாகியிருக்கிறது.
அந்த நூலைப் படித்தவன் – அதன் ஆன்மீக அம்சங்களால் ஈர்க்கப்பட்டவன் – என்ற முறையில் யோகானந்த பரஹம்சர் நிறுவிய யோகோதா சத்சங்க சொசைட்டி ஆஃப் இந்தியா என்ற அமைப்பின் (Yogoda Satsanga Society of India) கீழ் கொல்கத்தாவில் நிர்மாணிக்கப்பட்ட ஆசிரமத்தைக் காண விரும்பி அங்கு சென்றேன். ஆன்மீக உணர்வுடைய யாரும் கண்டிப்பாகக் காண வேண்டிய இடம். கங்கை நதியின் ஓரத்தில், எளிமையும், ஆன்மீக உணர்வுகளும் நிறைந்த – தியான மண்டபத்துடன் கூடிய – அழகிய ஆசிரமம்.
விக்டோரியா மகாராணி மஹால்
விவரிக்க முடியாத பிரமிப்புடன் கம்பீரமாக வீற்றிருக்கிறது விக்டோரியா மகாராணி மஹால். விக்டோரியா மகாராணி இந்தியாவுக்கு ஒருமுறை கூட வருகை தந்ததில்லையால்! எனினும் அவருக்காக கோடிக்கணக்கான செலவில் நினைவகம் நிர்மாணித்திருக்கிறார்கள் பிரிட்டிஷார். அங்கு விக்டோரியா மகாராணி பயன்படுத்திய பொருட்களையும் அருங்காட்சியகமாக வைத்திருக்கிறார்கள்.
நேரப்பற்றாக்குறை காரணமாக உள்ளே சென்று பார்க்க முடியவில்லை என்றாலும் வெளியில் இருந்து பார்க்கும்போது அந்த பிரம்மாண்டத்தின் அழகையும், நுணுக்கமான தோட்டக் கலையுடன் கூடிய, பரந்துபட்ட பூங்காவையும் கண்டி களிக்க முடிந்தது.
மண்குவளைகளில் தேநீர்
கொல்கத்தாவின் இன்னொரு சிறப்பு – சாலையோரக் கடைகளில் எங்கு சென்று தேநீர், காப்பி அருந்தினாலும் – ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் மண்குவளைகளைப் பயன்படுத்துகிறார்கள். அருந்தி விட்டு வீசி விடலாம். நெகிழிப் பைகளின் நடுவில் இப்படி ஒரு சுற்றுச் சூழல் பாதுகாப்புப் பயன்பாடு.
கொல்கத்தாவின் டிராம் வண்டிகள்
கொல்கத்தாவின் இன்னொரு அடையாளம் நகரின் நடுவே உலாவரும் டிராம் வண்டிகள். பிரிட்டிஷார் உருவாக்கி இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கும் ஒரு பாரம்பரியம்.
நகரின் மத்தியில் அவ்வப்போது உலா வருகின்றன இந்த டிராம் இரயில் வண்டிகள்.
வாடகை வண்டிகள் – பேருந்துகள்
பயணிகளை மறுக்க மாட்டோம் என்ற வாசகத்துடன் வலம் வருகின்றன மஞ்சள் நிற டாக்சிகள். கொல்கத்தா பல முனைகளில் நவீனமயமாகிவிட்டாலும் இன்னும் மோசமான நிலையில் வீதிகளில் இயங்குகின்றன பல்லாண்டு கால பழமை வாய்ந்த பயணிகள் பேருந்துகள்.
பயணிகள் பேருந்து போக்குவரத்துத் துறையில் சென்னை எவ்வளவோ முன்னேறிவிட்டது என்பதை உணர முடிகிறது.
கங்கை நதியில் படகுப் பயணம்
கொல்கத்தாவில் பிடித்த இடங்களுக்கெல்லாம் சென்று சுற்றி விட்டு மாலையில் கங்கை நதியில் அமைதியான படகுப் பயணம் போகலாம். நான்கைந்து பேரை ஏற்றிக் கொண்டு தனிஒரு படகோட்டி படகைக் கைகளால் துடுப்புகள் கொண்டு – செலுத்துகிறார். அரை மணி நேரப் பயணத்திற்கு ஒரு படகுக்கு ஆயிரம் ரூபாய் கட்டணம்.
மாலை வேளைகளில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்லக் காத்திருக்கின்றன. அலங்கரிக்கப்பட்ட குதிரை வண்டிகள்.
டிசம்பர், ஜனவரி மாதங்கள் குளிர் காலமாதலால் மாலை 5 மணிக்கெல்லாம் இருள் சூழ்ந்து விடுகிறது.
எனவே, இந்த காலகட்டத்தில் செல்பவர்கள், பகலிலேயே தங்களின் சுற்றுலாவைத் திட்டமிட்டுக் கொள்வது நலம்.
சாலையோரக் கடைகள்
சாலையோரங்களில் விதம் விதமாக அங்கேயே சமைத்து வழங்கப்படும் உள்ளூர் உணவு வகைகள் கொல்கத்தாவின் இன்னொரு முகம். சுவையோ, மலிவு விலையோ – காரணம் தெரியவில்லை. டை கட்டிய ஆண்களும் அலுவலகத்தில் வேலை செய்யும் பெண்களும் கூட்டம் கூட்டமாக கூடி நின்று சாப்பிடுகிறார்கள்.
நிறைவாக….அரசியல் கொஞ்சம்
எதைப்பற்றி எழுதினாலும், அரசியல் கலக்காமல் எப்படி? நிறைவாக மேற்கு வங்காள மாநில அரசியல் அம்சங்களின் தூவல் கொஞ்சம். நகரெங்கும் பெரிய அளவில் முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் பதாகைகளை வைத்திருக்கிறார்கள். ஊழல் மலிந்து விட்டதாக அங்கு பேசிய சிலர் குறைப்பட்டுக் கொண்டார்கள். இருந்தாலும் மம்தாவே மீண்டும் வெற்றி பெறுவது எப்படி என்பது தெரியவில்லை, மக்களின் மன ஓட்டம் அது என்கிறார்கள். 25 ஆண்டுகாலம் மேற்கு வங்காளத்தை ஆண்ட கம்யூனிஸ்ட் கட்சி மோசமான தோல்விகளை வரிசையாகக் கண்டு மாநில அரசியலில் முடங்கி விட்டது. இனி அந்தக் கட்சி வீறுகொண்டு எழ வாய்ப்பில்லை என்கிறார்கள்.
பலவீனமான காங்கிரஸ் இருப்பதாலேயே, எளிமையும், துணிச்சலும், அடாவடி அரசியலையும் கொண்டிருக்கும் மம்தா மக்களின் தேர்வாக உயர்ந்துள்ளார். 27 விழுக்காட்டு முஸ்லீம் வாக்காளர்களில் பெரும்பான்மையினரின் ஆதரவு மம்தாவின் பக்கம் இருப்பது அவரின் இன்னொரு பலம். இவற்றுக்கு நடுவில் பாஜகவின் செல்வாக்கும் உயர்ந்து வருகிறது.
இவ்வாறாக, ஆன்மீக, கலாச்சார, இலக்கிய, வரலாற்று அம்சங்களின் ஒன்று கலந்த கலவையாக – சுற்றுலாவுக்கு ஏற்ற நகராக – கொல்கத்தா திகழ்கிறது.
குறிப்பு: வாரத்திற்கு ஐந்து தடவை போயிங் 737-800 ரக விமானத்தில் திங்கள், செவ்வாய், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் மலேசிய ஏர்லைன்ஸ் (மாஸ்) கொல்கத்தாவுக்குப் பயணம் மேற்கொள்கிறது. எம்எச் (MH) 184 வழித் தடத்தில் கோலாலம்பூரிலிருந்து கொல்கத்தாவுக்கு இரவு 9.35 மணிக்கு திங்கள், செவ்வாய், வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு நாட்களில் புறப்படும் விமானம் மீண்டும் எம்எச் (MH) 185 என்ற வழித்தட எண்ணில், கொல்கத்தாவிலிருந்து இந்திய நேரப்படி பின்னிரவு 12.10 மணிக்கு புறப்பட்டு கோலாலம்பூர் திரும்புகிறது.