பாக்கூ: கசக்ஸ்தானில் விபத்துக்குள்ளான அசர்பைஜான் விமானம் ரஷியாவால் சுட்டு வீழ்த்திப்பட்டிருக்கலாம் என்ற ஆரூடங்கள் எழுந்துள்ளன.
ரஷியா, தான் அசர்பைஜான் விமானத்தை சுட்டு வீழ்த்தியதை ஒப்புக் கொள்ள வேண்டும் அசர்பைஜான் ஊடகங்கள் தெரிவித்தன.
எனினும் கசக்ஸ்தானில் புலனாய்வுகள் மேற்கொண்டு வரும் ஆய்வாளர்கள் இதுவரை எந்த ஒரு முடிவுக்கும் தாங்கள் வரவில்லை எனத் தெரிவித்தனர்.
அசர்பைஜான் விமானம் புதன்கிழமை (25 டிசம்பர்) காலை அசர்பைஜான் தலைநகர் பாக்கூவிலிருந்து செசன்யா நாட்டின் குரோஸ்னி நகருக்கு புறப்பட்டது. எனினும் பனிமூட்டம் காரணமாக அந்த விமானம் வேறு திசையில் செல்ல பணிக்கப்பட்டது.
அந்த அசர்பைஜான் விமானத்தில் 67 பேர் பயணிகள் இருந்தனர். அவர்களில் 37 பேர் அசர்பைஜான் குடிமக்களாவர். கசக்ஸ்தான் நாட்டின் நகரான அக்தாவ் நகரில் அந்த விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது.
அந்த விபத்தில் 38 பேர் கொல்லப்பட்டனர். 29 பேர் உயிர் பிழைத்தனர். அசர்பைஜான், கசக்ஸ்தான் நாட்டு அரசாங்கங்கள் தங்களின் விசாரணைகளைத் தனித் தனியே முடுக்கி விட்டுள்ளன.
அந்த விமான விபத்தில் தப்பித்த பயணி ஒருவர், விமானம் பனிமூட்டத்தின் நடுவே இரண்டு முறை தரையிறங்க முயற்சி செய்ததாகவும், மூன்றாவது முறை தரையிறங்க முற்பட்டபோது வெடிச்சத்தம் கேட்டதாகவும் தெரிவித்தார்.
இதற்கிடையில் வெளியிடப்பட்டிருக்கும் புதிய தகவல்கள், ஆதாரங்களின்படி ரஷிய தற்காப்பு ஏவுகணை ஒன்றிலிருந்து பாய்ந்த கூர்மையான இரும்புத் தகடு ஒன்றினால் விமானம் தாக்கப்பட்டிருக்கலாம் என தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.