வாஷிங்டன் : அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற பின்னர் அடுக்கடுக்காக டொனால்ட் டிரம்ப் கையைழுத்திடும் உத்தரவுகளையும், விடுத்து வரும் அறிவிப்புகளையும் பார்த்து உலக நாடுகள் அதிர்ச்சி அலைகளில் சிக்கியுள்ளன.
பாரிஸ் பருவ நிலை மாநாட்டு ஆவணத்தில் கையெழுத்திட்டு அதில் இணைந்திருந்தது அமெரிக்கா. முதல் தவணையில் அதிபராக இருந்தபோது பாரிஸ் பருவ நிலை மாநாட்டு ஆவணத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார் டிரம்ப். ஆனால் பைடன் 4 ஆண்டுகளுக்கு முன்னர் அதிபரானதும் பாரிஸ் பருவ நிலை மாநாட்டின் கடப்பாட்டில் மீண்டும் இணைவதாக அறிவித்தார். இப்போது டிரம்ப் அதிபரானதும் மீண்டும் பாரிஸ் பருவ நிலை மாநாட்டிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார்.
அடுத்த கட்ட அதிரடியாக ஐக்கிய நாடுகள் மன்றத்தின் உலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா விலகும் என்றும் டிரம்ப் அறிவித்திருக்கிறார். இப்படியாக இதுவரையில் 42 அதிபருக்கான அதிகாரத்துவ உத்தரவுகளில் கையெழுத்திட்டிருக்கிறார்.
தனிப்பட்ட முறையில் 115 நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதிபர் என்ற முறையில் 200-க்கும் மேற்பட்ட செயல்பாடுகளுக்கு அனுமதித்துள்ளார்.
டிரம்பின் அதிரடி நடவடிக்கைகளை வைத்துப் பார்க்கும்போது அவர் தனது முதல் தவணைக் காலத்தில் தயார் நிலையில் இல்லாது இருந்தது போல் இல்லாமல் இந்த முறை முழுமையான ஏற்பாடுகளுடனும், ஆற்றல் வாய்ந்த அதிகாரிகளின் துணையோடும் தனது 2-வது தவணைக்கான பதவிக் காலத்தை தொடக்கியுள்ளார் டிரம்ப் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.