புதுடில்லி : இந்தியாவில் கும்பமேளாவில் நிகழ்ந்த நெரிசலில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்தது. காயமடைந்தோர்களின் எண்ணிக்கை 60 என மதிப்பிடப்படுகிறது.
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் பிரக்யாராஜ் என்னுமிடத்தில் 3 புனித நதிகள் சங்கமிக்கும் இடத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளா நிகழ்ச்சி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்துக்கள் புனித நீராடிக் கொண்டாடும் திருவிழாவாகும். நாள்தோறும் கோடிக்கணக்கானோர் அங்கு வந்து கங்கை, யமுனா, சரஸ்வதி என்னும் 3 நதிகள் சங்கமிக்கும் இடத்தில் புனித நீராடுகிறார்கள். நேற்று ஒரு நாளில் மட்டும் 5.71 கோடி பேர் புனித நீராடினார்கள் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
நேற்று புதன்கிழமை (ஜனவரி 28) தை அமாவாசை என்பதாலும் வட இந்தியர்கள் மௌனி அமாவாசை என புனித நாளாக இதனைக் கொண்டாடுவதாலும், கட்டுக்கடங்காத அளவுக்கு பக்தர்கள் திரண்டதால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளனர். 60 பேர்வரை காயமடைந்துள்ளனர்.
கூட்டத்தினரைக் கட்டுப்படுத்த போடப்பட்ட தடுப்பு வேலிகளைத் தாண்டிச் செல்ல பலர் முற்பட்டதால் இந்தக் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் நிலைமை கட்டுப்பாட்டிற்குள் இருப்பதாகத் தெரிவித்தார். செவ்வாய்க்கிழமை (ஜனவரி 28) மட்டும் 6 கோடி பேர் மகா கும்பமேளாவுக்கு வந்தனர் என்றும் நேற்று 8 முதல் 10 கோடி பேர் வரை கும்பமேளாவில் குழுமியியதாக மதிப்பிடப்படுவதாகவும் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.
இந்தியப் பிரதமர் மோடியும் மரணமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொண்டார். இந்த சோக சம்பவத்தைத் தொடர்ந்து புனித நீராடுவது சில மணி நேரங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர் பின்னர் புனித நீராட பக்தர்கள் அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
நேற்று புதன்கிழமை அதிகாலை 2 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.