
வாஷிங்டன்: அமெரிக்காவின் உளவுத் துறை அமைப்புகளில் முக்கியமானது எஃபிஐ (FBI-Federal Bureau of Investigations) என்னும் தேசிய புலனாய்வுத் துறை. சிஐஏ என்பது அனைத்துலக அளவில் புலனாய்வுகளை மேற்கொள்ளும் அமைப்பு (CIA-Central Investigations Agency). எஃபிஐ என்பதோ அமெரிக்காவில் எல்லா மாநிலங்களிலும் புலனாய்வுகளை மேற்கொண்டு குற்றவாளிகளை நீதிமன்றத்தில் நிறுத்தும் அமைப்பு. அமெரிக்காவில் காவல் துறை மாநிலங்களின் அதிகாரத்தில் செயல்படும். முக்கிய வழக்குகள், விசாரணைகள் என்றால் எஃபிஐ தலையிட்டு கையிலெடுத்துக் கொள்ளும்.
எஃபிஐ அமைப்பின் இயக்குநர் பொறுப்பு ஏறத்தாழ ஓர் அமைச்சர் நிலைக்கு நிகரானது. இந்தப் பொறுப்பு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காஷ் பட்டேல் அதிபர் டொனால் டிரம்பால் நியமிக்கப்பட்டுள்ளார். அவரின் நியமனத்தை அமெரிக்க செனட் மன்றம் நேற்று வியாழக்கிழமை (பிப்ரவரி 20) அங்கீகரித்தது. காஷ் பட்டேல் டிரம்பின் நெருக்கமான ஆதரவாளராக கருதப்படுகிறார்.
டிரம்பின் முந்தைய ஆட்சிக் காலத்தில் பாதுகாப்பு ஆலோசனைக் குழுவில் பணியாற்றிய காஷ், டிரம்பின் அரசியல் எதிரிகளை பழிவாங்க முற்படுவார் என ஊடக ஆரூடங்கள் தெரிவிக்கின்றன. ஒரு வழக்கறிஞரான காஷ் அரசாங்க வழக்கறிஞராகப் பணியாற்றியிருக்கிறார்.
எனினும் அரசியல் பழிவாங்கலை மேற்கொள்ளமாட்டேன் என்றும் பதிலடி நடவடிக்கைகளை யாருக்கும் எதிராக மேற்கொள்ள மாட்டேன் என்றும் செனட் மன்ற தேர்வுக் குழுவின் முன்னிலையில் காஷ் அறிவித்தார்.