Home உலகம் சுனிதா வில்லியம்ஸ் வாழ்க்கை இனி முன்புபோல் திரும்புமா?

சுனிதா வில்லியம்ஸ் வாழ்க்கை இனி முன்புபோல் திரும்புமா?

62
0
SHARE
Ad
சுனிதா பூமிக்குத் திரும்பிய காட்சி

வாஷிங்டன் : இன்று புதன்கிழமை (மார்ச் 18) அதிகாலை கடந்த 286 நாட்களாக விண்வெளி ஆய்வுக் கூடத்தில் சிக்கிக் கிடந்த சுனிதா வில்லியம்ஸ் பூமியை வந்தடைந்தபோது அவரின் மனநிலை எப்படி இருந்திருக்கும்? எத்தனை எத்தனை எண்ணங்கள் அவரின் மனதில் அலைபாய்ந்திருக்கும்? இந்த நாளை எதிர்பார்த்து அவர் காத்திருந்த தருணங்கள் இன்று முடிவுக்கு வந்தபோது அவரின் இதயம் எந்த அளவுக்கு புளகாங்கிதம் அடைந்திருக்கும்?

ஊடகங்களும் இத்தகைய கற்பனையில்தான் மிதந்து கொண்டிருக்கின்றன. அவரின் உடல்நிலை காரணமாக தற்காலிகப் படுக்கையில் வைக்கப்பட்டு அவர் தன்னை ஏற்றி வந்த விண்கலத்தில் இருந்து வெளியே கொண்டுவரப்பட்டார்.

பலரிடமும் தொக்கி நிற்கும் கேள்வி இதுதான்! இனி அவரின் உடல் நிலை எப்படி இருக்கும்? முன்பு போல் அவரால் இயல்பாக நடமாட முடியுமா? அவருக்கு வேறுவிதமான உடல்நலக் கோளாறுகள் ஏற்படுமா? என்றெல்லாம் கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

#TamilSchoolmychoice

இருப்பினும், ஒரு பெண்மணியாக மனித குலத்திற்கென சாதனை புரிந்துள்ள அவரின் தியாகமும் தன்னம்பிக்கையும், மன உறுதியும் இனி பல்லாண்டுகளுக்கு தன்முனைப்புத் தூண்டலுக்கான பாடமாகப் போதிக்கப்படும்.

அவரை ஏற்றி வந்த விண்கலம் புளோரிடா மாநிலத்திற்கு அருகில் கடலில் தரையிறங்கி மிதந்தது.

அதைத் தொடர்ந்து பாராட்டு மழைகள் ஊடகங்களிலும் தொலைக்காட்சி அலைவரிசைகளிலும் குவிந்தன. அனைத்துலக அளவில் பல தொலைக்காட்சி அலைவரிசைகள் சுனிதா பூமிக்குத் திரும்பிய காட்சிகளை ஒளிபரப்பின.

புட்ச் வில்மோர் மற்றும் அனைத்துலக விண்வெளி நிலையத்தின் சக பணியாளர்களான அமெரிக்க விண்வெளி வீரர் நிக் ஹேக், ரஷ்ய விண்வெளி வீரர் அலெக்சாண்டர் கோர்புனோவ் ஆகியோருடன் இணைந்து அவர் பூமிக்கு திரும்பினார்.

நால்வரும் பயணித்த டிராகன் என்ற விண்கலம் படிப்படியாக கடலில் விழுந்ததும், அதனைச் சுற்றி டால்பின் மீன்கள் சூழ்ந்த காட்சிகளை நாசா ஒளிபரப்பியது.

சுமார் 17 மணி நேர விண்வெளிப் பயணத்திற்குப் பின்னர் சுனிதா பூமிக்குத் திரும்பியுள்ளார்.

சுனிதாவுக்கு பழைய சம்பவங்களை நினைவு கூர்ந்து இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி சமூக ஊடகங்களில் தன் வாழ்த்துகளைப் பதிவிட்டார்.

“140 கோடி இந்தியர்கள் எப்போதும் உங்கள் சாதனைகளில் பெருமிதம் கொண்டுள்ளனர். நீங்கள் ஊக்கமளிக்கும் மன உறுதியையும் விடாமுயற்சியையும் மீண்டும் வெளிப்படுத்தியுள்ளீர்கள். நீங்கள் ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் இருந்தாலும், தொடர்ந்து எங்கள் இதயங்களுக்கு நெருக்கமாக இருக்கிறீர்கள். இந்திய மக்கள் உங்கள் நல்ல ஆரோக்கியத்திற்காகவும் உங்கள் பணி வெற்றிக்காகவும் பிரார்த்தனை செய்கிறார்கள்” எனவும் மோடி தன் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்தார்.