
கோயம்புத்தூர் : அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் மற்றொரு முக்கியத் தலைவரான செங்கோட்டயனுக்கும் மோதல் என ஊடகங்கள் நிறைய அளவில் கொளுத்திப் போட்டன. அவற்றையெல்லாம் ஊதி அணைக்கும் வண்ணம் சில சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.
பெண்களைப் பற்றியும் சமயத்தைப் பற்றியும் தரக் குறைவாக அருவருக்கத்தக்க விதத்தில் பேசிய அமைச்சர் பொன்முடிக்கு எதிராக அதிமுக போராட்டம் நடத்தும் என அறிவித்தார் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. தமிழ் நாடு தழுவிய அளவில் நேற்று வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 17) நடைபெற்ற அந்தப் போராட்டத்திற்கு ஈரோடு பகுதியில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையேற்பார் எனவும் அறிவித்தார்.
அவ்வாறே ஈரோடு பகுதியில் பொன்முடிக்கு எதிரான போராட்டத்திற்குத் தலைமை தாங்கினார் செங்கோட்டையன். இதன் மூலம் அவருக்கும் பழனிசாமிக்கும் இடையிலான பனிப்போர் ஒரு முடிவுக்கு வந்துள்ளதாகக் கருதப்படுகிறது.
தனியாக புதுடில்லி சென்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சேங்கோட்டையன் சந்தித்தது சர்ச்சையைக் கிளப்பியது. அதிமுகவின் அடுத்த பொதுச் செயலாளர் செங்கோட்டையன்தான் என்ற ஆரூடங்களும் கிளம்பின.
இப்போது அதிமுக – பாஜக கூட்டணி அமைந்துவிட்டதால் செங்கோட்டையனுக்கும் பழனிசாமிக்கும் இடையில் மீண்டும் சுமுக உறவு நிலவுவதாக குறியீடுகள் காட்டுகின்றன.
பொன்முடிக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தின்போது, பழனிசாமி பெயரை செங்கோட்டையன் கூறாவிட்டாலும் பொதுச் செயலாளர் என அடிக்கடி தனது உரையில் தெரிவித்தார்.