சென்னை : கார்த்திக் சுப்புராஜ் இளம் வயதிலேயே ரஜினி போன்ற உச்ச நட்சத்திரங்களை வைத்து திரைப்படங்களை இயக்கியவர். சூர்யா கதாநாயகனாக நடிக்க குறுகிய காலத்தில் அவர் உருவாக்கியிருக்கும் திரைப்படம் ‘ரேட்ரோ’. ஆங்கிலப் பெயர் ஏன், ரெட்ரோ என்பதற்கான விளக்கம் என்ன என்ற கேள்விகளுக்கு மத்தியில் நேற்று வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 18) ரெட்ரோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். சூர்யாவுடன் அவரின் குடும்பத்தினரும் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இசை வெளியீட்டு விழாவைத் தொடர்ந்து ரெட்ரோ திரைப்படத்தின் முன்னோட்டமும் வெளியிடப்பட்டது. 1990-ஆம் ஆண்டுகளில் நடைபெறுவது போன்று திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது.
கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். பிரகாஷ் ராஜ், நாசர், ஜெயராம் ஆகியோரும் இந்தத் திரைப்படத்தில் இணைந்துள்ளனர்.
ஏறத்தாழ அதே காலகட்டத்தில் வெளியாகிறது கேங்கர்ஸ் திரைப்படம். சுந்தர் சி – வைகைப் புயல் வடிவேலு கூட்டணியில் உருவாகியிருக்கும் இந்தப் படமும் ரெட்ரோவும் மோதுவதால் யார் வசூலில் முந்துவார்கள் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
எதிர்வரும் மே 1-ஆம் தேதி ரெட்ரோ வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்தத் திரைப்படத்தின் முன்னோட்டத்தைக் கீழ்க்காணும் யூடியூப் இணைப்பில் காணலாம்: