அடுத்த நாள் திங்கட்கிழமை (மே 26) கிண்ணத்தைக் கைப்பற்றியதற்கான வெற்றி விழா கொண்டாட்டத்தில் லிவர்புல் களை கட்டியது. பலருக்கு கொண்டாட்ட நாளாகத் தொடங்கிய அந்தத் திங்கட்கிழமை இறுதியில் பீதியிலும் பயங்கரத்திலும் முடிந்தது, ஒரு கார் பாதசாரிகளின் கூட்டத்தின் மீது பாய்ந்ததில் குழந்தைகள் உட்பட 50 பேர் காயமடைந்தனர்.
நகரின் மையத்தில் நடந்த இந்த குழப்பமான சம்பவத்தின் விவரங்களை காவல் துறையினர் இப்போது ஆராய்ந்து வருகின்றனர். லிவர்பூல் கால்பந்து அணியின் பிரீமியர் லீக் பட்டம் வென்றதை கொண்டாடும் ரசிகர்களின் மீது வாகனம் பாய்ந்தது.
காரைச் செலுத்தியதாக நம்பப்படும் 53 வயதான ஒருவர் உடனடியாகக் கைது செய்யப்பட்டார். அவர் ஏன் மக்கள் கூட்டத்தின் மீது காரைச் செலுத்தினார் என்பது குறித்து விசாரணைகள் நடத்தப்படுகின்றன.
திங்கள்கிழமையன்று (மே 26) லிவர்பூல் நகரம், அதன் காற்பந்து குழுவின் அடையாள வண்ணமான சிவப்பு நிறத்தில் மூழ்கியது. லட்சக்கணக்கான கால்பந்து ரசிகர்கள் கிளப்பின் 20-வது லீக் பட்டத்தைக் கொண்டாடும் திறந்த-மேல்பகுதி பஸ் அணிவகுப்பைப் பார்க்க அதன் தெருக்களில் நிறைந்து வழிந்தனர்.
ஆனால் உள்ளூர் நேரம் மாலை 6 மணிக்குப் பிறகு கூட்டத்திற்குள் கவலை பரவத் தொடங்கியது. சாலை ஒன்றில் ஒரு கார் பல பாதசாரிகளுடன் மோதியதாக கிடைத்த தகவல்கள்தான் கவலை பரவியதற்கானக் காரணம்.
இந்த சம்பவத்தில் 50 பேர் காயமடைந்தனர். இவர்களில் 27 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். எஞ்சிய 20 பேர் சம்பவ இடத்திலேயே சிகிச்சை பெற்றனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஒரு குழந்தை உட்பட நான்கு பேர் காரின் கீழ் சிக்கியதால் தீயணைப்பு வீரர்களால் மீட்கப்பட வேண்டியிருந்தது என்றும் அதிகாரிகள் கூறினர்.
இன்று செவ்வாய்க்கிழமை காலையில், லிவர்பூல் நகர மன்றத் தலைவர் “இன்னும் நான்கு பேர் மருத்துவமனையில் மிக மிக மோசமான நிலையில் உள்ளனர்” எனத் தெரிவித்தார். ஆனால் உயிரிழப்புகள் குறித்த அறிவிப்பு எதுவும் இதுவரை வரவில்லை.