
சென்னை: அஜித்குமார் என்ற பெயர் தமிழ் நாட்டில் பிரபலம் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். ரஜினி, கமல் ஆகிய மூத்த நடிகர்களுக்கு அடுத்தபடியாக, விஜய்க்கு நிகராக, இரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருப்பவர் நடிகர் அஜித்குமார்.
அவரின் பெயர் கொண்ட காவலாளி ஒருவர் திருபுவனத்தில் காவல் துறையால் அடித்துக் கொல்லப்பட்டிருப்பது, தமிழ் நாட்டில் கொந்தளிப்பையும், பல்வேறு அரசியல் சர்ச்சைகளையும் ஏற்படுத்தியிருக்கிறது.
முதலமைச்சர் ஸ்டாலின் மரணமடைந்த அஜித்குமாரின் குடும்பத்தினரை தொலைபேசியில் அழைத்து மன்னிப்பு கேட்டுக் கொண்டார். திமுக சார்பில் 5 இலட்சம் ரூபாய் அந்தக் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அஜித்குமாரின் சகோதரருக்கு அரசு வேலை வழங்கப்பட்டிருக்கிறது. அஜித்குமாரின் தாயாருக்கு 3 சென்ட் நிலமும் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த இழப்பீடுகளுக்கு பாராட்டுகள் குவிந்தாலும், நடந்த காவல்துறை கொலையை மறைக்க திமுக ஆட்சி முயற்சி செய்கிறது என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பாதிப்படைந்த குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியிருப்பதோடு, அவர்களுக்கு அதிமுக துணை நிற்கும் என உறுதியளித்திருக்கிறார்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேரில் அஜித்குமார் இல்லத்திற்கு சென்று ஆறுதல் கூறியிருக்கிறார்.