ரியோ டி ஜெனிரோ: நாளை செவ்வாய்க்கிழமை (ஜூலை 8) முதல் பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் நடைபெறவிருக்கும், 17-வது பிரிக்ஸ் (BRICS) உச்சநிலை மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தலைமையிலான மலேசியக் குழு சென்றுள்ளது.
மாநாட்டுக்கு முன்பாக அன்வார் பல உலகத் தலைவர்களைத் தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேச்சுவார்த்தைகள் நடத்தியிருக்கிறார். அந்த வரிசையில் இன்று திங்கட்கிழமை (ஜூலை 7) இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை அன்வார் சந்தித்தார்.
தனது சந்திப்பு குறித்து தன் முகநூலில் பதிவிட்ட அன்வார், வணிகம், முதலீடு, இலக்கவியல் தொழில்நுட்பம், தற்காப்பு ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான வியூக ஒத்துழைப்பை மேலும் விரிவாக்கும் பரந்த வாய்ப்புகள் குறித்துத் தாங்கள் ஆராய்ந்ததாகவும் எனக் குறிப்பிட்டார்.
இலக்கவியல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, மறுசுழற்சி ஆற்றல், விண்வெளி ஆய்வு ஆகிய துறைகளில் இந்திய நிறுவனங்கள் மலேசியாவில் முதலீடு செய்ய வரவேற்பதாகவும் அன்வார் தெரிவித்தார்.
இந்திய – மலேசிய மக்களிடையே மேலும் அணுக்கமான நல்லுறவு தொடரத் தாங்கள் கடப்பாடு கொண்டுள்ளதாகவும், கலாச்சாரம், சுற்றுலா, கல்வி துறைகளில் ஒத்துழைப்பைத் தொடர விரும்புவதாகவும் தன் பதிவில் குறிப்பிட்ட அன்வார், ஐஐடி என்னும் இந்தியத் தொழில்நுட்ப கல்விக் கழகத்தின் கிளை ஒன்றை மலேசியாவில் நிறுவும் சாத்தியத்தையும் தாங்கள் விவாதித்ததாகவும் அன்வார் கூறினார்.
வட்டார அமைதியும், நிலைத் தன்மையும் தொடர தங்களின் ஆதரவுக் குரலை வெளிப்படுத்த வேண்டியதன் அவசியத்தை மோடியுடனான சந்திப்பில் வலியுறுத்தியதாகவும், அனைத்துலக விவகாரங்களான பாலஸ்தீனம், ஜம்மு காஷ்மீர் ஆகிய பிரச்சனைகள் அமைதியான முறையில் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் தெரிவித்ததாகவும் அன்வார் பதிவிட்டார்.
ஆசியான்-இந்தியா இடையிலான ஒத்துழைப்பும் மேலும் வலிமை பெற வேண்டும் என்றும் அன்வார் குறிப்பிட்டார். இருநாடுகளுக்கு இடையிலான நல்லுறவு மேலும் வளர்ச்சி பெற வேண்டும் என்ற தனது விருப்பத்தையும் அன்வார் தன் பதிவில் வெளிப்படுத்தினார்.