மே 16 –“கறுப்பு 505” என்ற பெயரோடு நாடு முழுமையிலும் அன்வார் இப்ராகிம் தலைமையில் நடத்தப்பட்டு வரும் மக்கள் சந்திப்பு கூட்டங்களுக்கு தொடர்ந்து மக்களின் ஆதரவு பெருகி வருகின்றது.
நேற்று இரவு, ஜோகூர் பாருவில், உலு திராம் அருகிலுள்ள புத்ரி வங்சா என்ற வட்டாரத்தில் நடத்தப்பட்ட கூட்டத்தில் 30,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டனர்.
குவாந்தானில் இரண்டு நாட்களுக்கு முன்பு நடத்தப்பட்ட கூட்டத்தில் 30,000க்கும் மேற்பட்டவர்கள் திரண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வரிசையில் இது ஐந்தாவது கூட்டமாகும்.
அனைத்து இன மக்களும் கூடினர்
ஜோகூர் மாநிலத்தின் பல இடங்களிலிருந்து, அனைத்து இனங்களிலிருந்தும் பெரும்பாலும் இளைஞர்களும் யுவதிகளுமாக இந்த கூட்டத்திற்கு வந்திருந்தனர்.
ஏறத்தாழ 100 போலீஸ்காரர்கள் கூட்டம் நடந்த இடத்தைச் சுற்றி நின்றிருந்தாலும், 4 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இந்த பொதுக் கூட்டத்திற்கு இடையூறு எதுவும் செய்யவில்லை.
மழைத் தூறல் இருந்தாலும், வந்திருந்தவர்கள் யாரும் கலைந்து செல்லாமல், தொடர்ந்து இருந்து தலைவர்களின் பேச்சை ஆரவாரத்துடன் ரசித்தனர்.
அன்வார் இப்ராகிம் வருகை
ஏறத்தாழ 10 மணியளவில் மேடையில் தோன்றி உரையாற்றிய அன்வார் இப்ராகிம், தனக்கு பெரும்பான்மையான பொதுமக்களின் ஆதரவு கிடைத்திருப்பதால், தான் அரசியலை விட்டு ஒதுங்கப் போவதுமில்லை, ஓய்வு பெறப் போவதுமில்லை என முழக்கமிட்டார்.
“வெறும் 47 சதவீத பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றுவிட்டு, தொடர்ந்து ஆட்சி செய்யும் தலைவரையோ, கட்சியையோ கொண்ட நாடு எதனையும் இந்த உலகத்தில் காண முடியுமா?” என்று அன்வார் தனது உரையில் கேள்வி எழுப்பினார்.
“நான் 51 சதவீத பெரும்பான்மை வாக்காளர்களின் ஆதரவைப் பெற்றிருக்கின்றேன். தேர்தலில் நடந்த முறைகேடுகள் மூலம் எனது வெற்றியைப் பறித்துவிட்டனர். எனவே, நான் எனது அரசியல் போராட்டத்திலிருந்து விலகப் போவதில்லை” என்றும் அன்வார் பலத்த ஆரவாரத்துக்கிடையே சூளுரைத்தார்.
மேற்கண்ட செய்திகளைத் தெரிவித்த மலேசியா கினி கூடியிருந்த கூட்டம் 30,000 என்று கணக்கிட்டாலும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் 60,000க்கும் மேற்பட்டவர்கள் திரண்டதாக தெரிவித்துள்ளனர்.
எந்தவித அசம்பாவிதமும் இன்றி கூட்டம் நடந்து முடிந்தாலும், தூரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பலரது கார்கள், அமிலங்கள் தெளிக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டதாக ஒரு சிலர் புகார் கூறியிருக்கின்றனர்.