மே 16 – பிரதமர் துறை துணையமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள ஹிண்ட்ராப்பின் ஒரு பிரிவின் தலைவர் பி.வேதமூர்த்தியின் நியமனம் குறித்து மலேசிய இந்திய முஸ்லிம் கட்சியான கிம்மா அதிருப்தி தெரிவித்துள்ளது.
அமைச்சரவை நியமனங்கள் குறித்து கருத்துரைத்த கிம்மாவின் இளைஞர் பகுதித் தலைவர் முகமட் ஜோஹான், முன்பு வீதி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட ஹிண்ட்ராப் இயக்கத்தைச் சேர்ந்த வேதமூர்த்திக்கு துணையமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது குறித்து கேள்வி எழுப்பினார்.
“நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தியவர் அவர். மலேசியாவின் நற்பெயரை வெளிநாடுகளில் கெடுத்தவர் அவர்” என தனது முக நூல் பக்கத்தில் முகமட் ஜோஹான் சாடியுள்ளதாக மலேசியா கினி வலைத்தள செய்தி கூறுகின்றது.
தேசிய முன்னணிக்கு நீண்ட காலமாக விசுவாசமாக இருக்கும் கிம்மாவின் முயற்சிகளை தேசியமுன்னணி இதுவரை அங்கீகரிக்கவில்லை என்றும் முகமட் ஜோஹான் கூறினார்.
“நாங்களும் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டால்தான் கிம்மாவும் அங்கீகரிக்கப்படுமா?” என்றும் முகமட் ஜோஹான் கேள்வி எழுப்பியுள்ளார்.