மே 15 – தனது இளைய சகோதரர் பி.வேதமூர்த்தி பிரதமர் துறை அமைச்சில் துணையமைச்சராக நியமனம் பெற்றுள்ளது குறித்து அவரது சகோதரரும் மற்றொரு ஹிண்ட்ராப் தலைவருமான உதயகுமார் கருத்து தெரிவித்துள்ளார்.
“வேதாவுக்கு வாழ்த்துக்கள். அவர்தான் புதிய மண்டோர். ஒரு புதிய சாமிவேலு” என்று உதயகுமார் மலேசியகினி வலைத்தள செய்தித் தளத்திற்கு அனுப்பிய செய்தியொன்றில் தெரிவித்துள்ளார்.
வேதமூர்த்தி இனியும் ஹிண்ட்ராப் இயக்கத்தைப் பிரதிநிதிக்கவில்லை என்றும், ஹிண்ட்ராப் இயக்கத்தின் நோக்கத்திற்கு எதிராக நடந்து கொண்டதற்காக அவரை ஹிண்ட்ராப் அமைப்பின் உச்சமன்றம் கடந்த ஏப்ரல் 25ஆம் தேதியே அவரை ஹிண்ட்ராப் அமைப்பிலிருந்து நீக்கி விட்டதாகவும் உதயகுமார் குறிப்பிட்டுள்ளார்.
ஹிண்ட்ராப் அமைப்பின் 18 அம்ச கோரிக்கைகளுக்கு எதிராக நடந்து கொண்டதற்காகவும் தேசிய முன்னணியில் இணைந்ததற்காவும் அவரை நீக்கி விட்டோம் என்றும் உதயகுமார் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
“தனது சொந்த சுயநலத்திற்காக திசை மாறிச் சென்றுவிட்டார் வேதமூர்த்தி. அவர் ஓர் அரசியல் சந்தர்ப்பவாதி” என்றும் தனது சகோதரரை சாடிய உதயகுமார், “நான்தான் ஹிண்ட்ராப் இயக்கத்தின் அதிகாரபூர்வ தலைவர். வேதமூர்த்தி அல்ல” என்றும் கூறினார்.
தான் 514 நாட்கள் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் இருந்தபோதுதான் வேதமூர்த்தி ஹிண்ட்ராப் இயக்கத்தில் பொறுப்புக்கு வந்தார் என்றும் உதயகுமார் தெரிவித்தார்.
“2007ஆம் ஆண்டு நவம்பர் 25ஆம் தேதி நடைபெற்ற சரித்திரப் பிரசித்தி பெற்ற ஹிண்ட்ராப் பேரணியை முன்னின்று நடத்தியது நான்தான், வேதமூர்த்தி அல்ல!” என்றும் கூறிய உதயகுமார் இனி தான் தொடர்ந்து ஹிண்ட்ராப் இயக்கத்தை தலைமையேற்று நடத்தப் போவதாகவும் ஹிண்ட்ராப்பின் “தேசிய முன்னணி எதிர்ப்பு போராட்டம்” இன்னும் தொடரும் என்றும் உறுதியுடன் தெரிவித்தார்.