பெட்டாலிங் ஜெயா, மே 17 – கடந்த மே 8 ஆம் தேதி கிளானா ஜெயா அரங்கத்தில் எதிர்கட்சியினரால் நடத்தப்பட்ட 505 அமைதிப்பேரணி குறித்து 10 நாட்கள் முன்னதாக காவல்துறையிடம் அறிவிக்காத குற்றத்திற்காக, ஸ்ரீ செத்தியா சட்டமன்ற உறுப்பினரான நிக் நாஸ்மி நிக் அகமட் (படம்) மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்த அமைதிப்பேரணியை சட்டத்துக்குப்புறம்பாக கிளானா ஜெயா அரங்கத்தில் மே 8 ஆம் தேதி இரவு 8.30 மணியளவில் நடத்தியதாக நிக் நாஸ்மி மீது காவல்றையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பிகேஆர் கட்சியின் தகவல் தொடர்பு தலைவரான நிக் நாஸ்மி இன்று பெட்டாலிங் ஜெயா நீதிமன்றத்தில் விசாரணைக்காக ஆஜர் செய்யப்பட்டு பின் பிணையின்றி விடுவிக்கப்பட்டுள்ளார்.
அமைதிப்பேரணி சட்டப்பிரிவு 9(1) என்ற பிரிவின் கீழ் அவருக்கு 10,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சட்டப்படி 2000 ரிங்கிட்க்கும் மேல் அபராதம் விதிக்கப்படுபவர்கள், தேர்தலில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி என்ற தகுதியை இழந்துவிடுவர் என்பது குறிப்பிடத்தக்கது.