Home அவசியம் படிக்க வேண்டியவை 8 பல்கலைக் கழக மாணவர்கள் நீக்கப்பட்டால் அவர்களுக்கு சிலாங்கூர் அரசாங்கம் உதவும்

8 பல்கலைக் கழக மாணவர்கள் நீக்கப்பட்டால் அவர்களுக்கு சிலாங்கூர் அரசாங்கம் உதவும்

767
0
SHARE
Ad

Nik Nazmi PKR Youth Leaderகோலாலம்பூர், நவம்பர் 7 – கடந்த வாரம் அன்வார் இப்ராகிமின் உரையை பல்கலைக் கழக வளாகத்தில் ஏற்பாடு செய்ததற்காக, ஒழுங்கு நடவடிக்கை விசாரணையை எதிர் நோக்கியிருக்கும் எட்டு பல்கலைக் கழக மாணவர்கள் வெளியேற்றப்பட்டால் அவர்களுக்குக் கைகொடுக்கவும், உதவவும் தயாராக இருப்பதாக சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் நிக் நஸ்மி நிக் அகமட் (படம்) அறிவித்துள்ளார்.

மாநிலத்தில் உள்ள பொதுப் பல்கலைக் கழகங்களான யூனிவர்சிடி சிலாங்கூர் அல்லது கோலேஜ் யூனிவர்சிடி இஸ்லாம் சிலாங்கூர் ஆகிய இரண்டில் ஒன்றில் அவர்கள் தங்களின் கல்வியைத் தொடர அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என பிகேஆர் கட்சியின் இளைஞர் பகுதித் தலைவரும், சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினருமான அவர் தெரிவித்துள்ளார்.

அந்த எட்டு மாணவர்கள் மீதும் தற்காலிக நீக்கமோ, நிரந்தர வெளியேற்றமோ எத்தகைய நடவடிக்கை எடுத்தாலும், அது மலாயாப் பல்கலைக் கழக நிர்வாகத்தின் தோற்றத்தை மோசமாக எடுத்துக் காட்டும் என்று கூறிய நிக் நஸ்மி, அந்த எட்டு மாணவர்களின் மீதான நடவடிக்கையின் பின் விளைவுகளை பல்கலைக் கழக நிர்வாகம் கவனமாக ஆராய வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

#TamilSchoolmychoice

மாணவர்களின் சிந்தனைகளை வளர்த்துக் கொள்ளும் வாய்ப்பை வழங்கி, அவர்கள் முரண்பட்ட கருத்துக்களோடு விவாதிக்க, ஊக்குவிக்க வேண்டிய பல்கலைக் கழகம், அவர்கள் மீது கடுமையான கட்டுப்பாடுகளை விதிப்பது பல்கலைக் கழகத்தின் தோற்றத்திற்கு களங்கம் ஏற்படுத்துகின்றது என்றும் நிக் நஸ்மி சாடியுள்ளார்.

பிகேஆர் கட்சியின் இளைஞர் பகுதியும் பாதிக்கப்பட்ட 8 மாணவர்களுக்கு ஆதரவு வழங்கும், பக்க பலமாக நிற்கும் என்றும் நிக் நஸ்மி உறுதியளித்துள்ளார்.