புதுடெல்லி, நவம்பர் 7 – இந்தியாவில் செயல்படும் தீவிரவாத அமைப்பான இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகளுடன் இணைந்து, அல்கொய்தா இந்தியாவில் மிகப்பெரும் சதி வலையை ஏற்படுத்தி இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
பாகிஸ்தான், ஆப்கனைத் தொடர்ந்து இந்தியாவைக் குறிவைத்துள்ள அல்–கொய்தாவிற்கு, இந்தியாவில் வலுவாகக் காலூன்ற எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்துள்ளன.
இந்நிலையில், இந்தியாவில் மிகப்பெரும் சதிச் செயலை ஏற்படுத்த தற்போது இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகளுடன் அல்-கொய்தா கை கோர்த்துள்ளது.
இது தொடர்பாக முஜாகிதீன் தீவிரவாதிகள் சிலரை அல்கொய்தா தலைவர்கள் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் சந்தித்துள்ளனர்.
மேலும், அங்கு அவர்களுக்கு பல்வேறு ஆயுதப் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. இந்த சதி வலையின் முதற்கட்டமாக ஆப்கனில் பயிற்சி முடித்த 20 முஜாகிதீன் தீவிரவாதிகள், இந்தியாவில் மிகப்பெரிய நாசவேலையைச் செய்ய இருப்பதாக இந்திய உளவுத் துறைக்கு தகவல் வந்துள்ளது.
இதற்காக அந்த தீவிரவாதிகள் நேபாளம் மற்றும் மியான்மர் வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவ முயற்சித்து வருவதாக இந்திய உளவுத்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.
சிரியா, ஈராக்கை ஐஎஸ்ஐஎஸ் கைப்பற்றி உள்ளது போல் இந்தியாவை கைப்பற்ற வேண்டும் என்பதே அல்-கொய்தாவின் திட்டம் என்று இந்திய உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.