Home Featured உலகம் பர்கினா ஃபாசோ தாக்குதல்: 63 பிணைக் கைதிகள் விடுவிப்பு – முற்றுகை தொடர்கின்றது!

பர்கினா ஃபாசோ தாக்குதல்: 63 பிணைக் கைதிகள் விடுவிப்பு – முற்றுகை தொடர்கின்றது!

646
0
SHARE
Ad

குவாகாடோகா: இன்று சனிக்கிழமை காலை பர்கினா ஃபாசோ நாட்டின் தலைநகர் குவாகாடோகாவில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் நடைபெற்ற இஸ்லாமிய தீவிரவாதிகளின் தாக்குதலைத் தொடர்ந்து, அந்த தங்கும் விடுதியின் மீதிலான முற்றுகையைத் தகர்க்கவும், அங்கு பிணையாகப் பிடிக்கப்பட்டுள்ளவர்களை மீட்கவும், அந்நாட்டு சிறப்புப் பாதுகாப்புப் படைகள் களத்தில் இறங்கியுள்ளன.

அவர்களுக்குத் துணையாக பிரான்ஸ் நாட்டின் சிறப்புப் படையினரும் இணைந்து கொண்டுள்ளனர். இதுவரையில் 20 பேர் கொல்லப்பட்டுள்ள நிலையில், 63 பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

Burkina Faso-mapபிணைக் கைதிகளில் 33 பேர் காயமடைந்திருந்ததாகவும் தகவல் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

#TamilSchoolmychoice

ஸ்பெலெண்டிட் எனப்படும் 147 அறைகளைக் கொண்ட, அந்த 4 மாடி தங்கும் விடுதியில் இன்னும் துப்பாக்கிச் சண்டைகள் நடைபெற்று வருவதாக தகவல் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. வெளிநாட்டவர்களும், ஐக்கிய நாட்டு சபை அதிகாரிகளும் அதிகமாகத் தங்கும் விடுதி இதுவெனக் கூறப்படுகின்றது.

அல் கய்டா இஸ்லாமிக் மாக்ரெப் என்ற இயக்கம் இந்தத் தாக்குதலைத் தொடுத்ததாக அறிவித்துள்ளது.

அந்த தங்கும் விடுதியின் வெளியே சடலங்கள் சிதறிக் கிடப்பதாகவும், இன்னும் எத்தனை தீவிரவாதிகள் தங்கும் விடுதியின் அறைகளில் ஒளிந்து கொண்டுள்ளனர் என்பது தெரியவில்லை என்றும் தகவல் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பர்கினோ ஃபாசோ மேற்கு ஆப்பிரிக்காவில், சுற்றிலும் நிலப் பிரதேச நாடுகளால் சூழப்பட்ட ஒரு நாடாகும். அதனைச் சுற்றி மாலி, நைகர், பெனின் உட்பட ஆறுநாடுகள் எல்லைகளைக் கொண்டிருக்கின்றன.

ஸ்பெலெண்டிட் ஹோட்டல் எனப்படும் தங்கும் விடுதியை நோக்கித் துப்பாக்கித் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களை தீ வைத்துக் கொளுத்தினர். அதைத் தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் அந்த இடத்தை வந்தடைந்தபோது, கடுமையான துப்பாக்கிச் சண்டைகள் நடந்தன.

இதனைத் தொடர்ந்து குவாகாடோகா நகர் முழுவதும் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரான்ஸ் நாட்டின் காலனித்துவ நாடான பர்கினா ஃபாசோவில் ஏறத்தாழ 3,500 பிரெஞ்சு நாட்டினர் வசித்து வருகின்றனர். இவர்களைக் குறிவைத்துத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது.

தாக்குதல் நடத்திய அல் கய்டா குழு இது பிரான்ஸ் நாட்டிற்கு எதிரானத் தாக்குதல் எனக் கூறியதாக அமெரிக்காவின் ஒரு கண்காணிப்புக் குழு குறிப்பிட்டுள்ளது.

உலகளாவிய அளவில் பல நாடுகளில் தீவிரவாதத் தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன.

கடந்த வியாழக்கிழமைதான் இந்தோனேசியத் தலைநகர் ஜாகர்த்தாவில் தீவிரவாதத் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டது.

இந்தத் தாக்குதல்களைத் தொடர்ந்து கோலாலம்பூரும் உச்ச கட்ட பாதுகாப்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மலேசியக் காவல் துறைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் தெரிவித்துள்ளார்.