மே 25 – இதுவரை பல விவகாரங்களில் எதிரும் புதிருமாக செயல்பட்டு வந்த ம.இ.கா. இளைஞர் பகுதியும், அரசு சார்பற்ற இயக்கங்களும் தற்போது ஒரு விவகாரத்தில் ஒரே சிந்தனையுடன் ஒன்றிணைந்துள்ளன.
அதிலும் குறிப்பாக சமூகப் போராட்டவாதி ஹாஜி தஸ்லிம் தலைமையில் இயங்கி வரும் ‘நியாட்’ என்ற அமைப்பு பல விவகாரங்களில் கடந்த காலங்களில் ம.இ.கா.வுடன் நேரடி மோதல்களில் ஈடுபட்டிருக்கின்றது.
ஆனால், இப்போதோ அவை ஒரு விவகாரத்தில் ஒன்றிணைந்து ஒரே கண்ணோட்டத்துடன் போராட முன்வந்துள்ளன.
வேதமூர்த்தியை துணையமைச்சராக பிரதமர் நியமனம் செய்திருப்பதை எதிர்ப்பதுதான் அது!
150 இயக்கங்கள் ஒன்றிணைந்தன
கோலாலம்பூரில் நியாட் ஏற்பாட்டில் நடைபெற்ற ஒரு கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்ட 150 அரசு சார்பற்ற இயக்கங்களுடன் ம.இ.கா.வின் இளைஞர் பகுதியும் இணைந்து. வேதமூர்த்தியின் நியமனத்திற்கு எதிராக பிரதமருக்கு ஆட்சேப மனு ஒன்றை வழங்க முன்வந்துள்ளன.
56 ஆண்டு காலம் தேசிய முன்னணியோடு இணைந்து பணியாற்றியுள்ள ம.இ.காவுக்கு முக்கியத்துவம் வழங்கப்படவில்லை. ஆனால், நமது நாட்டைப் பற்றி வெளிநாடுகளில் இழிவாகப் பேசிய வேதமூர்த்திக்கு துணையமைச்சர் பதவியை வழங்கியதன் மூலம் பிரதமர் ம.இ.காவையும், இந்திய சமுதாயத்தையும் இழிவு படுத்தி விட்டார் என ஒருமித்த குரலில் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவித்தனர்.
இந்த கூட்டத்தில் ம.இ.கா. இளைஞர் பகுதித் தலைவர் டி.மோகனும் கலந்து கொண்டு உரையாற்றினார். கோத்தா ஆலாம் ஷா சட்டமன்ற உறுப்பினரும், ஹிண்ட்ராப் போராட்டவாதியுமான கணபதி ராவ்வும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டார்.
கூட்டத்தில் கலந்து கொண்டவர்களின் கருத்துக்களைத் தொடர்ந்து, அடுத்த கட்ட நடவடிக்கையாக புத்ரா ஜெயாவில், வேதமூர்த்தியின் நியமனத்தை எதிர்த்து மாபெரும் ஆட்சேபக் கூட்டம் ஒன்றை நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த போராட்டத்தில், சமூக அக்கறையுடைய எல்லா சமூக இயக்கங்களும் எங்களுடன் ஒன்றிணைய வேண்டுமென நியாட் அமைப்பின் தலைவர் ஹாஜி தஸ்லிம் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து மேல்விவரங்கள் வேண்டுவோர் 012-2584390 என்ற கைத் தொலைபேசி எண்ணுடன் தொடர்பு கொள்ளலாம்.