Home நாடு “இதுவரை உள்ள ஐ.ஜி.பி.க்களில் அதிக அரசியல் சார்புடையவர் காலிட் அபு பாக்கார்” – லிம் கிட்...

“இதுவரை உள்ள ஐ.ஜி.பி.க்களில் அதிக அரசியல் சார்புடையவர் காலிட் அபு பாக்கார்” – லிம் கிட் சியாங் குற்றச்சாட்டு

583
0
SHARE
Ad

Lim KIt Siangமே 24 புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மலேசியக் காவல் துறையின் தலைவர் காலிட் அபு பாக்கார்தான் இதுவரை காவல் துறை தலைவர்களாக (ஐஜிபி) பதவி வகித்தவர்களிலேயே அதிக அரசியல் சார்புடையவராக நடந்து கொள்கின்றார் என ஜசெகவின் தலைவர் லிம் கிட் சியாங் (படம்) குற்றம் சாட்டியுள்ளார்.

#TamilSchoolmychoice

காலிட் அபு பாக்கார் காவல் துறை தலைவராகப் பொறுப்பேற்றவுடன்தான் எதிர் கட்சித் தலைவர்களும், சமூகப் போராட்டவாதிகளும் காவல் துறையின் அடக்குமுறைக்கும், நெருக்கடிகளுக்கும் இதுவரை இல்லாத அளவுக்கு ஆளாகியுள்ளனர்.

“அரசியல் புள்ளிகளும், சமூக போராட்டவாதிகளும் கைது செய்யப்படுவது அரசியல் நோக்கத்தை உடையது அல்ல, என்றும், சட்டத்துக்கு மிஞ்சியவர்கள் யாரும் இல்லை என்றும் காலிட் கூறிவருகின்றார். சட்டத்திலிருந்து தப்பிப்பதற்கு குற்றம் புரிபவர்கள் அரசியலை கேடயமாகப் பயன்படுத்தக்கூடாது  என்றும் அவர் கூறுகின்றார். பதவியேற்ற ஒரு வாரத்திலேயே இதுவரை இருந்த காவல்துறை தலைவர்களிலேயே அதிக அரசியல் சார்புடையவர் என்பதைக் காட்டிவிட்டார். அம்னோவுக்கும் தேசிய முன்னணிக்கும் அவர் சாதகமானவராக மாறிவிட்டார்” என்றும் லிம் கிட் சியாங் சாடியுள்ளார்.

“மக்களின் பாதுகாப்பையும், தற்காப்பையும் உறுதி செய்யவும், குற்றச் செயல்களைக் குறைப்பதற்கும் தகுந்த நடவடிக்கைகள் எடுப்பதை விட்டு விட்டு, மக்கள் கூட்டணி தலைவர்கள் மீதும், சமூகப் போராட்டவாதிகள் மீதும் காலிட் கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வருகின்றார். இதே காலகட்டத்தில்தான் அகமட் சாஹிட்டும் புதிய உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார்” என்று லிம் கிட் சியாங் மேலும் கூறியுள்ளார்.

புதிய காவல் துறைத் தலைவர் தனது முதல் கடமையாக மக்களைப் பாதுகாக்க வேண்டும். அவர்களின் வீடுகளில், தெருக்களில், பொது இடங்களில் அவர்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதுதான் காவல் துறை தலைவரின் முதல் வேலை, அதனை அவர் செய்ய வேண்டும் என்றும் லிம் கிட் சியாங் கேட்டுக் கொண்டார்.

மகாதீரின் சாயலும், பாணியும் பின்பற்றப்படுகின்றது

“இதுவரை நடந்த கைதுகளை வைத்துப் பார்க்கும் போது அதில் மகாதீரின் பழைய பாணியும், சாயலும் தென்படுகின்றது. 22 ஆண்டுகள் சர்வாதிகாரத்தனமாக நாட்டை ஆண்ட மகாதீர் அன்று 1987ஆம் ஆண்டில் “ஓபராசி லாலாங் (Operasi Lalang)” மேற்கொண்ட போது இந்த கைது நடவடிக்கைகள் எதைப் பற்றியும் தனக்கு தெரியாது என்று கூறினார். அதையேதான் அகமட் சாஹிட்டும் இப்போது கூறிவருகின்றார்” என்பதையும் லிம் கிட் சியாங் சுட்டிக் காட்டினார்

1987ஆம் ஆண்டில் மகாதீரின் தலைமைத்துவத்தில் மேற்கொள்ளப்பட்ட ஓபராசி லாலாங் என்ற கைது நடவடிக்கையின்போது நாடு முழுமையிலும் 106 பேர் கைது செய்யப்பட்டார்கள். இரண்டு நாளிதழ்கள் முடக்கப்பட்டன.

சுதந்திரத்திற்கு பின்னர் மேற்கொள்ளப்பட்ட மிகப் பெரிய அடக்கு முறையாகவும், அரசியல் கைது நடவடிக்கையாகவும் “ஓபராசி லாலாங்” இப்போதும் கருதப்படுகின்றது.

கைது செய்யப்பட்டவர்களில் பலர் அப்போது தைப்பிங் கமுந்திங்கிலுள்ள தடுப்புக் காவல் முகாமில், உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டனர்.

“நஜிப்பும், அகமட் சாஹிட்டும் தங்களுக்கு இந்த கைது நடவடிக்கைகள் பற்றி எதுவும் தெரியாது என்று சொல்லப் போகிறார்களா? சாஹிட்டும் ஐஜிபி காலிட்டும் இந்த கைது நடவடிக்கைகள் பற்றி ஒருவருக்கொருவர் தெரியாது என்று கூறுவதை யாரும் இங்கே நம்பப் போவதில்லை. நாட்டில் அடக்கு முறையையும், மனித உரிமை மீறலையும் எடுத்துக்காட்டும் இரண்டாவது ஓபராசி லாலாங் இது” என்றும் லிம் கிட் சியாங் கூறினார்.

13வது பொதுத் தேர்தலில் நஜிப்பின் மோசமான தோல்வியை ஈடு செய்யும் வண்ணம், அகமட் சாஹிட்டின் கையாளாக தான் செயல்படவில்லை என்பதை எடுத்துக் காட்டும் விதமாக காவல் துறை தலைவர் காலிட் செயல்பட வேண்டும் என்றும் லிம் கிட் சியாங் கேட்டுக் கொண்டார்.