மே 24 – அரசாங்கம் சார்பாக இந்தியர் விவகாரங்களைக் கவனிக்கப் போவது ம.இ.கா. தான் என்றும், ஹிண்ட்ராப் தலைவரும் புதிதாக துணையமைச்சராக நியமிக்கப்பட்டவருமான வேதமூர்த்தி அந்த விவகாரங்களைக் கையாள அனுமதிக்க மாட்டோம் என்றும் ம.இ.கா தேசியத் தலைவர் இன்று உறுதியுடன் கூறினார்.
இன்று நடைபெற்ற ம.இ.கா. மத்திய செயலவைக் கூட்டத்தின் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது பழனிவேல் இதனைத் தெரிவித்தார்.
“பிரதமர் இலாகாவின் இந்தியர் விவகாரப் பிரிவை வேதமூர்த்தி எடுத்துக் கொள்ள ஒருபோதும் ம.இ.கா அனுமதிக்காது. வேதமூர்த்தி பிரதமரால் துணையமைச்சராக நியமிக்கப்பட்ட ஒரு தனிநபர். ஆனால் இந்திய சமுதாயத்தை அரசாங்கத்தில் பிரதிநிதிப்பது நாங்கள்தான்” என்றும் பழனிவேல் கூறினார்.
இந்த விவகாரம் குறித்து தான் பிரதமருடன் அடுத்த வாரம் சந்தித்து விவாதிக்கப் போவதாகவும் பழனிவேல் தெரிவித்துள்ளார்.
“இந்தியர் விவகாரங்கள் தொடர்பிலான நியமனங்களுக்கு எங்களின் கோரிக்கைகளை பிரதமர் செவிமெடுப்பார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு” என்றும் பழனிவேல் நம்பிக்கை தெரிவித்தார்.