நாப்பிடா, மே 26- பொருளாதாரப் பேச்சுவார்த்தைகாக ஜப்பானின் பிரதமர் ஷின்சோ அபே, இன்று பர்மா சென்றுள்ளார்.
கடந்த 1977-ம் ஆண்டிற்குப் பின், ஜப்பான் நாட்டின் பிரதமர் ஒருவர் பர்மாவிற்கு செல்வது இதுவே முதன்முறையாகும். இவருடன் வர்த்தகப் பிரதிநிதிகள் குழு ஒன்றும் பர்மா சென்றுள்ளது.
பர்மாவிற்கு பொருளாதார உதவிகள் அளிப்பதில் முதலிடத்தில் உள்ள ஜப்பான், அந்நாட்டுடனான வர்த்தக உறவுகளை மேம்படுத்திக் கொள்ள விரும்புகிறது. பிரதமரின் இந்த வருகையின்போது, பர்மாவிற்கு கடனுதவியாக 980 மில்லியன் டாலர்களை அளிக்ககூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2012-ம் ஆண்டில் ஜப்பானின் முந்தைய அரசு, பர்மா நாட்டின் 3.7 பில்லியன் டாலர் கடன் தொகையைத் தள்ளுபடி செய்வதாக அறிவித்தது. அதனைத் தற்போதைய அரசும் ஏற்றுக்கொண்டது.
பர்மாவுடனான வர்த்தக உறவுகளை பலப்படுத்த விரும்புவதாகக் கூறியுள்ள ஜப்பான் அரசின் முக்கிய செயலர் யோஷிஹிடே சுகா அந்நாட்டின் மறுமலர்ச்சிக்கும் துணை புரிய விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த 2011-ம் ஆண்டில், மியான்மரில் (பர்மாவின் தற்போதைய பெயர்) ராணுவ ஆட்சி முடிவுக்கு வந்து ஜனநாயக ஆட்சி அமைக்கப்பட்டது. அதன் விளைவாக நூற்றுக்கணக்கான அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டு தணிக்கை விதிகளும் தளர்த்தப்பட்டன. ஐரோப்பிய யூனியனும், அமெரிக்காவும், அந்நாட்டிற்கு விதித்திருந்த பொருளாதாரத் தடைகளை ரத்து செய்தன.
இருப்பினும், சமீபத்தில் மியான்மரில் முஸ்லிம் மக்களுக்கும், புத்த மதத்தினருக்கும் இடையில் நடைபெறும் தொடர் கலவரங்கள் அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குத் தடையாக உள்ளன.
இந்தநிலையில், ஜப்பான் அரசால் அளிக்கப்படும் உதவித்தொகை நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குப் பெரும் உதவியாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.