சென்னை,மே 27 – கடந்த ஐந்தாண்டுகளில் முதன் முறையாக, சென்னையில் நேற்று 109 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.
கோடையின் உச்சகட்ட கத்திரி வெயில், கடந்த 4ம் தேதி துவங்கி நாளையுடன் முடிகிறது.
காலை முதல் சுள்ளென சுட்டெரிக்கும் வெயில், பிற்பகலில் அனல் போல் வாட்டியெடுக்கிறது. இதுவரை இல்லாத அளவுக்கு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று அனல் காற்றுடன் வெயில் தகித்தது.
சென்னை மீனம்பாக்கத்தில் நேற்று அதிகபட்சமாக, 42.8 (109.03 பாரன்ஹீட்) செல்சியசும், சென்னை நுங்கம்பாக்கத்தில் 42.7 (108.86) டிகிரி செல்சியசும் வெப்பம் பதிவாகியுள்ளது. இது கடந்த ஐந்து ஆண்டுகளில் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறுகையில்,”தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெப்ப காற்றுடன் வெயில் அதிகமாக உணரப்படும். சென்னை நகரில் இன்று 43 (109.39) செல்சியசை ஒட்டி வெப்பம் பதிவாகும். எனவே, பொதுமக்கள் பிற்பகலில் வெளியே செல்வதை தவிர்க்கலாம். வெளியே செல்வோர், கதர் ஆடையை அணிந்து செல்லலாம்’ என்றார்.