டெஹ்ரான், ஜூன் 16- ஈரான் அதிபர் பதவிக்கான தேர்தல் கடந்த 14ம் தேதி நடைபெற்றது.
வாக்குரிமை பெற்ற 3 கோடியே 67 லட்சம் பேர் இந்த தேர்தலில் வாக்களித்தனர். 72.7 சதவீதம் வாக்குப் பதிவானதாக உள்துறை அமைச்சகம் அறிவித்தது.
இதில், ஒரு கோடியே 86 லட்சம் வாக்குகள் (50.68 சதவீதம்) பெற்று ஹசன் ரோஹானி(வயது 65) வெற்றி அடைந்துள்ளார்.
2003ம் ஆண்டு ஈரான் அதிபராக கடாமி பொறுப்பு வகித்தபோது அணு உலைகளின் செயல்பாட்டை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று வாதிட்டவர் ரோஹானி என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர் பொறுப்பேற்றுக்கொண்ட அகமதினெஜாத் ஆட்சியில் மீண்டும் அணு உலைகள் உற்பத்தியை தொடங்கியதால் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் பகைக்கு ஈரான் இலக்காக நேர்ந்தது நினைவிருக்கலாம்.
இதனால் ஈரானின் நாணயமான ரியாலின் அன்னிய செலவாணி மதிப்பு எப்போதும் இல்லாத அளவிற்கு 70 சதவீத சரிவை சந்தித்தது.
இதனையடுத்து, ஈரானின் தற்போதைய பணவீக்கம் 30 சதவீதம் அதிகரித்துள்ளது.
தென்கிழக்கு டெஹ்ரானில் உள்ள சோர்கே நகரில் 1948ம் ஆண்டு பிறந்த ரோஹானி, ஸ்காட்லேண்டில் உள்ள கிளாஸ்கோ கேலடோனியன் பல்கலைக் கழகத்தில் சட்டம் பயின்று பட்டம் பெற்றவர்.
திருமணமாகி 4 குழந்தைகளுடன் வாழும் இவர், ஈரான் முன்னாள் அதிபர் அயாத்துல்லா கோமேனியுடன் சுமுகமான உறவைப் பேணி வருகிறார்.
இவரது ஆட்சிக் காலத்தில் அமெரிக்காவுடனான பிணக்கு நீங்கி எண்ணெய் வளம் மிக்க ஈரான் பொருளாதார ரீதியாகவும் முன்னேறும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.