கொழும்பு, ஜூன் 16- இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளுக்கு வரும் செப்டம்பர் மாதம் மாகாண சபை தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி விடுதலைப்புலிகள் ஆட்சி செய்த வடக்கு பகுதிக்கு அதிபர் ராஜபக்ச இன்று பயணம் மேற்கொண்டார்.
விடுதலைப்புலிகளின் தலைநகரமாக விளங்கிய கிளிநொச்சியில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராஜபக்ச பேசியதாவது:-
கடந்த 30 வருடங்களாக நீங்கள் சண்டையை பார்த்து வந்தீர்கள். இப்பொழுது கடந்த 4 வருடங்களாக நீங்கள் முன்னேற்றத்தை பார்த்து வருகிறீர்கள். இதற்கு முன்பு காணப்படாத பல முன்னேற்ற திட்டத்தை நீங்கள் இங்கு பார்த்து இருக்கிறீர்கள்.
மேலும் பல நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று உறுதி கூறுகிறேன். வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் எதிர்மறை தாக்கத்தை அங்கீகரிக்க வேண்டமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து பேசிய ராஜபக்ச, முன்னதாக கொழும்பு-வடக்கு பகுதியை இணைக்கும் நெடுஞ்சாலையையும் திறந்து வைத்தார்.