சென்னை, ஜூன் 16- தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு:-
நான் திரைக்கதை, உரையாடல் எழுதிய ‘பாலைவன ரோஜாக்கள்’ என்ற படத்தினை இயக்குனர் மணிவண்ணன் மிகவும் திறம்பட இயக்கி, அந்தப் படம் வெற்றிகரமாக தமிழகத்திலே ஓடிய நேரத்தில், அவருடன் நான் நெருங்கிப் பழகியதால், எப்படிப்பட்ட திறமையாளர் அவர் என்பதை நான் புரிந்து கொண்டேன்.
அண்மையில் நான் திரைக்கதை, உரையாடல் எழுதிய ‘இளைஞன்’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற இடத்தில் அவரைச் சந்திக்க நேர்ந்தது. அப்போதே உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்ததை என்னிடம் தெரிவித்தார்.
திறமையான ஒருவர் திடீரென்று நம்மை விட்டுப் பிரிந்து விட்டார். அவருடைய மறைவு குறித்து வருந்துவதோடு, அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், திரைப்பட உலகைச் சேர்ந்தவர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.