Home 13வது பொதுத் தேர்தல் தேர்தல் ஆணையப் பொறுப்பாளர்கள் தாங்களாகவே பதவி விலகுவதே நல்லது – அம்பிகா வேண்டுகோள்

தேர்தல் ஆணையப் பொறுப்பாளர்கள் தாங்களாகவே பதவி விலகுவதே நல்லது – அம்பிகா வேண்டுகோள்

605
0
SHARE
Ad

ambigaஜூன் 16 – 13வது பொதுத் தேர்தலில் நிகழ்ந்த முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று, எது நியாயம் என்பதை உணர்ந்து, தேர்தல் ஆணையப் பொறுப்பாளர்கள் அவர்களாகவே பதவி விலகுவதுதான் சிறந்தது என பெர்சே இயக்கத்தின் இணைத் தலைவர் அம்பிகா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

#TamilSchoolmychoice

தேர்தல் ஆணையப் பொறுப்பாளர்களை அகற்றுவது என்பது எளிதான காரியமல்ல, காரணம் அவர்கள் மாமன்னரால் நியமிக்கப்பட்டவர்கள். அவர்களும் தாங்கள் எந்த தவறும் செய்யவில்லை எனத் தங்களைத் தாங்களே தற்காத்துக் கொண்டு  தொடர்ந்து பதவியில் நீடித்து வருகின்றார்கள்.

இத்தகைய இக்கட்டான நிலையில் பொதுமக்களின் நம்பிக்கையை இழந்து விட்ட அவர்கள், அழியாத மை விவகாரம் போன்ற பல முறைகேடுகளுக்கு காரணமான அவர்கள், இனியும் தாமதிக்காமல், நியாயத்தை உணர்ந்து தாங்களாகவே முன்வந்து பதவி விலகுவதுதான் அனைவருக்கும் நல்லது என்றும் அம்பிகா கூறியுள்ளார்.

இனியும் பொதுமக்களின் நம்பிக்கையைத் தாங்கள் பெற்றிருக்கின்றோமா என்பதை அவர்கள் தங்களையே கேட்டுக்கொள்வது நல்லது என்றும் மலேசியாகினி இணைய செய்தித் தளத்திற்கு வழங்கிய நேர்காணலில் அம்பிகா கூறியுள்ளார்.

உதாரணமாக, அழியா மை விவகாரத்தில் தேர்தல் ஆணையப் பொறுப்பாளர்கள் பழியை சுகாதார அமைச்சின் மீது சுமத்தியுள்ளனர். சுகாதார அமைச்சு, புற்றுநோய் தாக்கும் அபாயம் இருப்பதாகக் கூறி அந்த மையிலிருந்த சில்வர் நைட்ரேட் என்ற இராசாயனப் பொருளின்  அளவை குறைக்கும்படி கூறினார்கள் என தேர்தல் ஆணையம் கூறுகின்றது. அதனால்தான் விரல் நுனியில் இடப்பட்ட அந்த மை அழிகின்ற தன்மையைப் பெற்றது என்றும் தேர்தல் ஆணையம் கூறுகின்றது.

ஆனால், அந்த மையைத் தாங்கள் ஆராய்ச்சி செய்யவே இல்லை என சுகாதார அமைச்சு மறுத்திருக்கின்றது. இதுபோன்ற குளறுபடிகளுக்கு தாங்களே காரணம் என்பதை தேர்தல் ஆணையத்தினர் உணர்ந்து அவர்களாகவே அந்த தவறுகளுக்கு பொறுப்பேற்க வேண்டும் என்றும் அம்பிகா கூறினார்.

எல்லை சீரமைப்பு மீண்டும் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைப்பதா?

இதனைத் தொடர்ந்து ஆண்டு இறுதியில் நடைபெற விருக்கும் தொகுதிகளுக்கான எல்லை சீரமைப்பு பணிகளை நடப்பு தேர்தல் ஆணையப் பொறுப்பாளர்களிடம் நம்பி ஒப்படைக்க முடியாது என்றும் அம்பிகா உறுதியாகக் கூறியுள்ளார்.

கடந்த காலங்களில் நியாயமில்லாத முறையில் தொகுதி எல்லை சீரமைப்புகள் தேசிய முன்னணிக்கு சாதகமாக மாற்றியமைக்கப்பட்டன. அதன் காரணமாகத்தான், 46 சதவீத வாக்காளர் ஆதரவை மட்டுமே பெற்றிருந்தாலும் 60 சதவீத நாடாளுமன்ற இடங்களை தேசிய முன்னணியால் கைப்பற்ற முடிந்தது.

அதோடு, சபா மாநிலத்தின் கள்ள அடையாள அட்டை விநியோகத்தால் பல வெளிநாட்டவர்கள் வாக்காளர்களாக மாறியுள்ளனர் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியது என்றும் அம்பிகா சுட்டிக்காட்டினார்.

தேர்தல் ஆணையம் பதவி விலக மறுத்தாலும், தான் தொடர்ந்து தேர்தல் சீரமைப்புகளுக்காக போராடப் போவதாகவும், தேர்தல் சீரமைப்பு என்பது ஜனநாயகத்தின் ஓர் முக்கிய அங்கம் என்றும் வழக்கறிஞரான அம்பிகா  சீனிவாசன் கூறினார்.