கொழும்பு, செப். 24– இலங்கையில் நடந்த மாகாணங்களின் தேர்தல் முடிவு குறித்து அதிபர் மகிந்த ராஜபக்ச ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:–
மாகாண சபை தேர்தல்கள் மூலம் நாட்டின் ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டுள்ளது. வடமேற்கு மற்றும் மத்திய மாகாண சபைகளில் ஆளும் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
வடக்கு மாகாணத்தில் தேர்தல் நடத்தியது தாய் நாடு அடைந்த வெற்றியாகும். மிக குறுகிய காலத்தில் வடக்கில் இயல்பு நிலைமையை ஏற்படுத்த உதவி புரிந்த அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.
மிகப்பெரிய அர்ப்பணிப்புடன் கிடைத்துள்ள இந்த சந்தர்ப்பத்தை பாதுகாப்பது அனைவரின் கடமையாகும். மோசமான கடும் போக்கு கொள்கைகளால் இந்த நோக்கங்களை அடைய முடியாது.
இவ்வாறு அதிபர் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அதிபர் ராஜபக்சேவின் தம்பியும் பொருளாதார அபிவிருத்தி மந்திரியுமான பசில் ராஜபக்சே நிருபர்களிடம் கூறியதாவது:–
வடக்கு மாகாணத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி திட்டத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னெடுத்துச் செல்ல வேண்டும். வடக்கு மாகாண மக்களினால் வழங்கப்பட்ட ஆணையை கூட்டமைப்பு கட்டிக் காக்க வேண்டும்.
தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து செயல்படத் தயார். குறிப்பாக மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகள் தொடர்பில் கூட்டமைப்புடன் செயல்படத் தயார்.
மாகாணத்தின் இளைஞர் யுவதிகளின் அபிவிருத்தியை கூட்டமைப்பு உறுதி செய்ய வேண்டும். தேசிய நலன்களையும் நாட்டின் இறையாண்மையையும் பாதுகாக்கும் வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
ஜாதிக ஹெல உறுமய கட்சி செயலாளர் உதயகம்மன்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
இந்த தேர்தல் வெற்றியை பயன்படுத்தி தமிழ் தேசிய கூட்டமைப்பு வடக்கு பகுதியில் தனிநாடு அமைக்கும். எனவே மாகாண சபைகளுக்கான அதிகாரங்களை அரசு உடனடியாக குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு வடமாகாண சபை தேர்தலில் பெரும்பான்மை வாக்குகளை பெற்று வெற்றி ஈட்டியுள்ளனர். வடக்கில் கடந்த 30 ஆண்டுகளில் வேறு எந்த அரசியல் கட்சிகளும் இவ்வாறு செயல்படவில்லை. அது மட்டுமின்றி அரசாங்கத்தால் வடமாகாணத்தில் பெரும்பான்மை வாக்குகளை பெற முடியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
வடக்கு மக்களின் இதயங்களில் போரினால் ஏற்பட்ட காயங்கள் இருக்கும். இந்நினைவுகள் அவர்களது இதயத்தில் இன்னும் உள்ளன என்று கூறப்பட்டுள்ளது.